புல்லரம்பாக்கத்தில் கிருஷ்ணன் கோவில் இடிப்பு பகுதிவாசிகள் சாலை மறியலால் நிறுத்தி வைப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் கிராமத்தில் ருக்மணி சத்யபாமா சமேத சந்தன கோபால் கிருஷ்ண சந்தன விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இப்பகுதியை சேர்ந்த வனிதா ஸ்ரீதர், 40 என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இக்கோவிலை அகற்ற கோரி 2023 செப்டம்பரில் வழக்கு தொடுத்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் பொது பாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற அதே ஆண்டு டிசம்பரில் உத்தரவிட்டது.உத்தரவு நிறைவேற்றப்படாததால், நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததை கண்டித்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு, கோவிலை அகற்ற வேண்டுமென கடந்த ஆகஸ்டில் மீண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதுஇதையடுத்து நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவிலை திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், டி.எஸ்.பி., தமிழரசி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த அப்பகுதிவாசிகள் அங்கு கோவில் அகற்றும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் போலீசார் கொட்டும் மழையிலும் கோவிலின் சுற்றுசுவரை இடித்து அகற்றினர்.ஆத்திரமடைந்த அப்பகுதிவாசிகள் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் புல்லரம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் தாசில்தார் வாசுதேவன் பேச்சு நடத்தி கோவில் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என, தெரிவித்தையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களில் 11 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.