மேலும் செய்திகள்
முதல்வர் பார்வைக்கு -2
09-Nov-2024
மீஞ்சூர்:மீஞ்சூர் அடுத்த மேலுார் கிராமத்தில் திருவுடையம்மன் கோவில் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமைகளில் வரும் பவுர்ணமி நாளில், இங்கு பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர்.அன்றைய நாளில் மேலுார் திருவுடையம்மன், திருவொற்றியூர் வடிவுடையம்மன், திருமுல்லைவாயல் கொடியுடையம்மன் ஆகிய தலங்களுக்கு செல்லும் பக்தர்கள், மூன்று கோவில்களிலும் வழிபடுகின்றனர்.இதனால், பவுர்ணமி நாளில் மேலுார் திருவுடையம்மன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். அதேசமயம், அவர்களுக்கு எந்தவொரு அடிப்படை வசதியும் அங்கு செய்யப்படவில்லை.அதாவது குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை. அங்குள்ள இளைப்பாறும் மண்டபம் பூட்டியே கிடக்கிறது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு ஏற்ப முன்னேற்பாடுகள் செய்யப்படுவதில்லை. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அன்று பவுர்ணமி என்பதால், பக்தர்கள் அதிகளவில் இங்கு வருவர்.அதற்கேற்ப தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:குறுகிய நுழைவாயிலால், பக்தர்கள் சென்று வருவதற்கு சிரமப்படுகின்றனர். பக்தர்கள் உள்ளே செல்வதற்கு ஒரு வழியும், வெளியேறுவதற்கு மற்றொரு வழியையும் ஏற்படுத்த வேண்டும். அதற்கான கட்டமைப்பு அங்கு உள்ளது.குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். தற்போது மழை பெய்து வருவதால், பக்தர்கள் நனையாமல் வரிசையில் காத்திருப்பதற்கு ஏற்ப பந்தல்கள் அமைக்க வேண்டும். கூடுதல் போலீசாரை பணி அமர்த்தி, பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
09-Nov-2024