சாலையில் நிறுத்தும் ஆட்டோக்களால் நெரிசலில் தவிக்கும் பக்தர்கள்
கும்மிடிப்பூண்டி: புதுரோடு சந்திப்பில், சாலை மற்றும் மேம்பால சுரங்கப்பாதையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் ஆட்டோக்களால், சிறுவாபுரி முருகன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். கவரைப்பேட்டை அடுத்த சின்னம்பேடு கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு முக்கிய விஷேச நாட்களில் வாகனங்களில் வரும் பக்தர்கள், போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வந்தனர். இதையடுத்து, கூட்டம் அதிகம் கூடும் நாட்களில், கோவிலில் இருந்து 3 கி.மீ.,யில், சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தச்சூர் அடுத்த புதுரோடு சந்திப்பில், கார், வேன் மற்றும் சுற்றுலா வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுத்து அங்கேயே நிறுத்தடுகின்றன. அங்கிருந்து, சிற்றுந்து மற்றும் ஆட்டோக்கள் மூலமாக பக்தர்கள் கோவிலுக்கு சென்று வருகின்றனர். இதனால், விஷேச நாட்களில், புதுரோடு சந்திப்பு பகுதியில், எப்போதும் நுாற்றுக்கணக்கான கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் சாலையோரம் அணிவகுத்து நிற்கும். அப்பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், கார் மற்றும் வேன்களில் வரும் பக்தர்கள் நெரிசலில் சிக்குகின்றனர். எனவே, கவரைப்பேட்டை போலீசார், புதுரோடு சந்திப்பில் ஆட்டோக்களை முறைப்படுத்தி, சீரான போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.