உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  இரண்டரை மணி நேரம் காத்திருந்து முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

 இரண்டரை மணி நேரம் காத்திருந்து முருகன் கோவிலில் பக்தர்கள் தரிசனம்

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலைப்பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டன. திருத்தணி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்கவேல், தங்க கிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று விடுமுறை மற்றும் கார்த்திகை மாதத்தின் கடைசி முகூர்த்த நாள் என்பதால், காலை 6:00 மணி முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் முருகன் கோவிலில் குவிந்தனர். இதனால், பக்தர்கள் பொது வழியில் மூலவரை தரிசிக்க, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். மேலும், 100 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள், ஒன்றரை மணி நேரம் வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி - தெய்வானையுடன் தங்கத் தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். முருகன் மலைக்கோவிலுக்கு செல்வதற்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்ததால், மலைக்கோவில் மற்றும் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, இருசக்கர வாகனங்கள் மட்டுமே மலைப்பாதையில் அனுமதிக்கப் பட்டன. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில், 10 பேருந்துகள் இயக்கப்பட்டன. திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் தலைமையில், 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ