உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடும்பரம் வழிப்பலகை அகற்றம் கோவிலை தேடி அலையும் பக்தர்கள்

நெடும்பரம் வழிப்பலகை அகற்றம் கோவிலை தேடி அலையும் பக்தர்கள்

திருவாலங்காடு, தேசிய நெடுஞ்சாலையில் நெடும்பரம் கிராமத்திற்கு செல்லும் வழிப்பலகை அகற்றப்பட்டுள்ளதால், அக்கிராமத்தில் உள்ள கோதண்டராமர் சுவாமி கோவிலுக்கு, வழி தெரியாமல் வெளியூர் பக்தர்கள் தேடி அலைவதாக வேதனை தெரிவிக்கின்றனர். திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான கோதண்டராம சுவாமி கோவில், கனகம்மாசத்திரம் அடுத்த நெடும்பரம் கிராமத்தில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு தினமும், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். 1100 ஆண்டுகள் பழமையான இக்கோவில், சோழர் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்களை வரவேற்கும் விதமாக, சென்னை ---- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை நுழைவு பகுதியில், கோவில் நிர்வாகம் சார்பில் இரும்பாலான வரவேற்பு பலகை அமைக்கப்பட்டிருந்தது. இதை முறையாக கோவில் நிர்வாகம் பராமரிக்காததால், நான்கு மாதங்களுக்கு முன் துருப்பிடித்து உடைந்து விழுந்தது. அதன்பின், பெயர் பலகை பொருத்தப்படவில்லை. இதனால், தேசிய நெடுஞ்சாலை வழியாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், கோவிலுக்கு செல்லும் கிராமம் எங்குள்ளது என தெரியாமல் தேடி அலைகின்றனர். எனவே, பக்தர்களின் நலன் கருதி, திருத்தணி கோவில் நிர்வாகம், மீண்டும் அதே இடத்தில் பெயர் பலகையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி