2 அடி தோண்டினால் சுடுகாட்டில் தண்ணீர் உடல்களை அடக்கம் செய்வதில் அவதி
செங்குன்றம்:திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், பாடியநல்லுார் மற்றும் நல்லுார் பஞ்சாயத்தில் தலா 25,000த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.இந்த இரண்டு பஞ்சாயத்திலும், யாராவது இறந்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு பாடியநல்லுார் மற்றும் நல்லுார் சுடுகாடு மட்டுமே உள்ளது. இந்த இரண்டு சுடுகாட்டிலும், இதுவரை மின் மயானம் கொண்டுவரப்படவில்லை.மழைக்காலங்களில் இறந்தவர்களுடைய வீட்டில் துக்கம் பெரியது என்றால், அதைவிட அவர்களை அடக்கம் செய்வதில் ஏற்படுகிற துக்கம் மிகப்பெரியதாக மாறியுள்ளது.காரணம், 2 அடி தோண்டினாலே நிலத்தடி நீர் பூமிக்கு மேலே வந்து விடுகிறது. இதனால், இறந்தவர்களை நிம்மதியாக இறுதிச்சடங்கு செய்து, அடக்கம் செய்ய முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.இது குறித்து பகுதி மக்கள் கூறுகையில், 'இரண்டு பஞ்சாயத்திலும் அடிப்படை பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. முதற்கட்டமாக இறந்தவர்களை நிம்மதியாக அடக்கம் செய்யவோ, எரிக்கவோ முடியாத நிலை உள்ளது. இதற்கு, நிரந்தன தீர்வு காண வேண்டும் என, ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளையும், மக்கள் பிரதிநிதிகளையும் கேட்டுக்கொள்கிறோம்' என்றனர்.