பழுதடைந்த பள்ளி கட்டடம் மாணவர்கள், பெற்றோர் அச்சம்
ஊத்துக்கோட்டை:பூண்டி ஒன்றியம், பெரிஞ்சேரி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை, 14 மாணவ, மாணவியர் கல்வி பயில்கின்றனர். இங்கு தலைமையாசிரியர் உள்ளிட்ட இரண்டு ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். இங்கு மாணவர்கள் கல்வி கற்க கடந்த, 30 ஆண்டுகளுக்கு முன் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது.தற்போது இந்த கட்டடம் சிதிலமடைந்து உள்ளது. கட்டடத்தின் மேல்பகுதி பழுதடைந்து சிமென்ட் காரைகள் பெயர்ந்துள்ளதால், மழைக்காலங்களில் மழைநீர் ஊடுருவி கட்டடத்தின் மேல் பகுதி எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய நிலையில் உள்ளது. இந்த கட்டடத்தின் எதிரில் மற்றொரு வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டு தற்போது மாணவர்கள் அங்கு கல்வி கற்கின்றனர்.மழைக்காலம் துவங்கி உள்ள நிலையில் மழைநீர் தேங்கி பழைய கட்டடம் இடியும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பூண்டி ஒன்றிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை பழைய கட்டடத்தை இடிக்காமல் மெத்தனமாக உள்ளனர். பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன் கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து பழுதடைந்த கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர், கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.