உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடப்பெரும்பாக்கம் ஏரி மண் குவாரிக்கு அனுமதியால்... அதிருப்தி! 3வது ஆண்டாக கனிமவளத்தை கபளீகரம் செய்ய ஆயத்தம்

தடப்பெரும்பாக்கம் ஏரி மண் குவாரிக்கு அனுமதியால்... அதிருப்தி! 3வது ஆண்டாக கனிமவளத்தை கபளீகரம் செய்ய ஆயத்தம்

பொன்னேரி: சென்னை எல்லை சாலை திட்டப் பணிகள் என்ற பெயரில். இரண்டு ஆண்டுகளாக தடப்பெரும்பாக்கம் ஏரியில் மண், மணல் அள்ளி கனிமளம் கபளீகரம் செய்யப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது ஆண்டாக குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பது. சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் கிராமத்தில், நீர்வளத்துறையின் கட்டுப்பாட்டில், 160 பரப்பளவில் பாசன ஏரி அமைந்துள்ளது. ஏரியில் தேக்கி வைக்கப்படும் மழைநீர், சுற்றியுள்ள தடப்பெரும்பாக்கம், வடக்குப்பட்டு, கொடூர் ஆகிய கிராமங்களின் பாசனத்திற்கு பயன்படுகிறது.ஏரியில் மழைநீர் தேங்குவதால், விவசாய நிலங்களில் உள்ள ஆழ்துளை கிணறுகளின் நிலத்தடி நீரும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. குடிநீர் தேவைகளுக்கு ஏரியின் பல்வேறு பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து, குடியிருப்புகளுக்கு வழங்கப்படுகிறது.இந்நிலையில், காட்டப்பள்ளி -- மாமல்லபுரம் இடையே, 133 கி.மீ., தொலைவிற்கு, சென்னை எல்லை சாலை திட்டப்பணிகள், மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது, ஐந்து நிலைகளாக பிரித்து பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.முதல் நிலையாக, காட்டுப்பள்ளி -- தச்சூர் இடையே, 25.4 கி.மீ., தொலைவிற்கு பாலங்கள் மற்றும் சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலை பணிகளுக்காக, தடப்பெரும்பாக்கம் பாசன ஏரியில், இரண்டு ஆண்டுகளாக மண் அள்ள அனுமதிக்கப்பட்டு குவாரி செயல்பட்டது.இங்கு அனுமதிக்கப்பட்ட, 0.09 மீ., ஆழத்திற்கு மாறாக, 3 மீ., ஆழம் வரை மண் அள்ளப்பட்டது. மேலும், களிமண் மட்டுமின்றி சவுடு மண் மற்றும் மணல் உள்ளிட்டவைகளும் அள்ளி, ஏரி கபளீகரம் செய்யப்பட்டது.அதிக ஆழத்தில் மணலுடன் சேர்த்து மண் அள்ளப்படுவதால், மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் மழைநீர், நிலத்தடி நீராக மாற வாய்ப்பின்றி போகும் அபாயம் உருவாகும் எனக்கூறி, கிராமவாசிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டனர்.கிராமவாசிகளின் எதிர்ப்பையும் மீறி, இரண்டு ஆண்டுகளாக குவாரி செயல்பட்டது. தினமும் நுாற்றுக்கணக்கான லாரிகளில் மண் அள்ளப்பட்டது. மேலும், லாரிகள் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக சுமையுடன் தடப்பெரும்பாக்கம் கிராமத்தின் வழியாக சென்றதால், சாலைகளும் சேதமடைந்தன. சேதமான சாலைகள் இதுவரை சீரமைக்கப்படாமல் உள்ளது.இந்நிலையில், மூன்றாவது ஆண்டாக தடப்பெரும்பாக்கம் ஏரியில் மண் அள்ள குவாரிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதற்காக, ஏரியின் கரைகள் வெட்டி எடுக்கப்பட்டு, லாரிகள் சென்று வருவதற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. நேற்று முதல் லாரிகளில் மண் அள்ளப்பட்டு வருகிறது. இது, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் கட்டுமான பணிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. மூன்றாவது ஆண்டாக தடப்பெரும்பாக்கம் ஏரியில் கனிமவளத்தை கபளீகரம் செய்ய ஆயத்தமாகி வருவது, கிராமவாசிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறியதாவது:ஏரி முழுதும் பரவலாக, 3 அடி ஆழத்திற்கு மண் அள்ளினால், துார்வாரியதை போல் அமையும். ஆனால், ஒரே இடத்தில், 15 அடி ஆழம் வரை மண் அள்ளிவிடுகின்றனர். நீர்வளம் மற்றும் வருவாய்த் துறையினர் குவாரியின் செயல்பாடுகளை கண்டுகொள்வதில்லை.ஆண்டுதோறும் மண் அள்ளுவதற்காகவே, ஏரியில் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் தேக்கி வைக்கப்படுவதில்லை. களிமண்ணுடன், சவுடு மண் மற்றும் மணலும் சேர்த்து அள்ளப்படுவதால், ஏரியின் வளம் பாதித்து வருகிறது.கனிமளம் தொடர்ந்து கபளீகரம் செய்யப்படுவதால் தடப்பெரும்பாக்கம், கொடூர், வடக்குப்பட்டு கிராமங்களின் நிலத்தடி நீர் கேள்விக்குறியாகி வருகிறது. இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து ஏரியில் மண் அள்ளப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.மேலும், மண் குவாரி என்ற பெயரில், ஏரியை கபளீகரம் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஏரியில் முழு கொள்ளளவிற்கு மழைநீரை சேமிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ