உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் பரவும் மர்ம காய்ச்சல் வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல்

திருத்தணியில் பரவும் மர்ம காய்ச்சல் வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தல்

திருத்தணி:திருத்தணி வட்டாரத்தில் சில நாட்களாக மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவதால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். தொடர் காய்ச்சல் இருந்தால், ரத்த பரிசோதனை செய்ய வேண்டும் என, வட்டார மருத்துவ அலுவலர் அறிவுறுத்தியுள்ளார். திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியத்தில், 15 நாட்களுக்கு மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை கடும் அவதிப்படுகின்றனர். இஸ்லாம் நகர், முஸ்லீம்நகர், சூர்யநகரம், செருக்கனுார், தாடூர் மற்றும் கே.ஜி.கண்டிகை ஆகிய பகுதிகளில், காய்ச்சலால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பீரகுப்பம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், திருத்தணி நகர ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருத்தணி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை சென்று சிகிச்சை பெறுகின்றனர். தினமும், 500க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் காரணமாக வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். சிலர் உள்நோயாளியாகவும் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இந்த காய்ச்சல் தொடர்ந்து இருப்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக, குழந்தைகள் காய்ச்சலால் வாந்தி, வயிற்று போக்கால் அதிகளவில் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு சிகிச்சை செல்கின்றனர். எனவே வேகமாக பரவும் மர்ம காய்ச்சலை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பீரகுப்பம் வட்டார மருத்துவ அலுவலர் கலைவாணி கூறியதாவது: தற்போது மழை பெய்வதாலும், பருவ நிலை மாற்றத்தாலும், காய்ச்சல் அதிகளவில் உள்ளது. இந்த காய்ச்சல் ஒரு வாரமாக சிலருக்கு தொடரும். இரண்டு நாட்கள் தொடர்ந்து காய்ச்சல் இருந்தால், உடனே அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருத்தணி அரசு மருத்துமனைக்கு சென்று சிகிச்சை பெறுவதுடன், ரத்த மாதிரி பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். காய்ச்சல் வந்தவர்கள் அதிகளவில் சுடுதண்ணீர், பழவகை சாறுகள் அடிக்கடி பருக வேண்டும். வீட்டையும், சுற்றியுள்ள பகுதிகளிலும், கழிவு நீர், தண்ணீர் தேங்காதவாறு துாய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை