மீஞ்சூரில் இடிந்து விழும் அபாயத்தில் பயன்பாடு இல்லாத காவலர் குடியிருப்பு
மீஞ்சூர்:மீஞ்சூரில் பயன்பாடு இன்றி பாழடைந்து கிடக்கும் காவலர் குடியிருப்பு கட்டடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், அருகில் வசிக்கும் மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மீஞ்சூர் காவல் நிலையத்தின் அருகில், 1999ல், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் வாயிலாக காவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. தரை, முதல் மற்றும் இரண்டாம் தளம் என ஆறு குடியிருப்புகள் கட்டப்பட்டன. மொத்தம் நான்கு அடுக்குமாடி கட்டடங்களில் 24 குடியிருப்புகள் மற்றும் இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோருக்கு தனித்தனி குடியிருப்புகளும் கட்டப்பட்டன. அங்கு காவலர்கள் குடும்பத்துடன் குடியேறினர். மேற்கண்ட கட்டடங்களில் தொடர் பராமரிப்பு இல்லாததால், பல்வேறு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டும், சிமென்ட் பூச்சுகள் உதிரவும் துவங்கின. குடியிருப்புகள் ஒவ்வொன்றாக சேதம் அடைந்ததை தொடர்ந்து, காவலர்கள் அவற்றை பயன்படுத்துவதை தவிர்த்தனர். கடந்த, 10 ஆண்டுகளாக காவலர் குடியிருப்பு கட்டடங்கள் பயன்பாடின்றி கிடக்கின்றன. தற்போது மேலும் பலவீனம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் அபாயகரமாக உள்ளன. மேலும், இரவு நேரங்களில் இவை சமூக விரோதிகளின் கூடாரமாகவும், பேரூராட்சியின் குப்பை கழிவுகளை சேகரித்து வைக்கும் மையமாகவும் மாறி வருகிறது. கட்டடங்களை சுற்றிலும் செடிகள் சூழ்ந்து விஷ ஜந்துக்கள் உலா வருகின்றன. பாழடைந்த காவலர் குடியிருப்புகள் அருகே மீஞ்சூர் அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மற்ற குடியிருப்புகள் அமைந்து உள்ளதால், அப்பகுதிவாசிகள் அச்சத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே பாழடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ள காவலர் குடியிருப்பு கட்டடங்களை முழுமையாக இடித்து அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.