உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கூட்டு குடிநீர் குழாய் பதிக்க புதிய சாலையில் ‛டிரில்லிங்

கூட்டு குடிநீர் குழாய் பதிக்க புதிய சாலையில் ‛டிரில்லிங்

பள்ளிப்பட்டு:சாலை வரிவாக்கம் செய்யப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த ஒரே மாதத்தில், குடிநீர் குழாய் சீரமைப்பிற்காக தார்சாலையில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் இருந்து பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு ஊராட்சிகளுக்கு கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, பள்ளிப்பட்டில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அத்திமாஞ்சேரிபேட்டை அடுத்த அண்ணாநகர் பகுதியில் நொச்சிலி கூட்டு சாலையில் சமீபத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடந்து முடிந்தன. இந்த கூட்டு சாலையில் மட்டும் விபத்துகளை தவிர்க்கும் விதமாக மைய தடுப்பான்களும் கட்டப்பட்டுள்ளன. பணிகள் நிறைவடைந்து கடந்த மாதம் முதல் இந்த சந்திப்பு பொது போக்குவரத்திற்கு முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சாலை விரிவாக்கத்தில், கூட்டு குடிநீர் குழாய், தார்சாலைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. இந்த மார்க்கத்தில் கனரக வாகனங்களில் போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், சாலைக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பழுதடைந்துள்ளன. பழுதடைந்து குழாய்களை சீரமைப்பதற்காக நேற்று தார்சாலையில் இயந்திரங்கள் வாயிலாக தோண்டி எடுத்தனர். பயன்பாட்டிற்கு வந்த ஒரே மாதத்தில் தார் சாலையில் பள்ளம் தோண்டும் நிலை ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதியை தாண்டி, ஓரமாக கூட்டு குடிநீர் திட்ட குழாய் பதிக்கப்பட்டிருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ