குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்
திருவள்ளூர்:தலக்காஞ்சேரி-புன்னப்பாக்கம் சாலையில் குடிநீர் குழாய் உடைப்பால், கடந்த இரண்டு நாட்களாக தண்ணீர் வீணாக சாலையில் ஆறாக ஓடி விரயமாகி வருகிறது.திருவள்ளூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது தலக்காஞ்சேரி ஊராட்சி. இங்கு, 500 வீடுகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருவள்ளூர் நகராட்சி அருகில் அமைந்துள்ளதால் இங்கு, புதிதாக குடியிருப்பு பகுதிகள் உருவாகி வருகின்றன. மேலும், புன்னப்பாக்கத்தில் இருந்து திருவள்ளூருக்கு 4 கி.மீட்டர் துாரத்தில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டு உள்ளதால், அப்பகுதியில் உள்ளோர், எளிதாக திருவள்ளூருக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், புன்னப்பாக்கம்-திருவள்ளூர் சாலையில், தலக்காஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலகம் எதிரில் குடிநீர் குழாய் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர், சாலையில் ஆறாக ஓடி வீணாகி வருகிறது. இதனால், இந்த ஊராட்சிக்கு உட்பட்ட 4வது வார்டு பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக குடிநீர் வராமல் உள்ளதால், கிராமவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, ஊராட்சி நிர்வாகம் உடைந்த குழாயை சீர்படுத்தி, குடிநீர் விநியோகிக்க வேண்டும் என பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.