5 ஆண்டாக திறக்கப்படாத குடிநீர் சுத்திகரிப்பு மையம்
புட்லுார்:திருவள்ளூர் ஒன்றியம் புட்லுார் ஊராட்சியில், 1,500க்கும் மேற்பட்ட வீடுகளில், 10,000 பேர் வசித்து வருகின்றனர். புட்லுாரில் 2018 - 19ல், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் சுத்திகரிப்பு மையம் கட்டப்பட்டது.மொத்தம் 2,000 லிட்டம் கொள்ளளவு கொண்ட குடிநீர் சுத்திகரிப்பு செய்யும் வகையில், ஊரக வளர்ச்சி துறை வாயிலாக, ஆர்.ஓ., பிளான்ட் அமைக்கப்பட்டது. கட்டி முடித்து, ஐந்து ஆண்டுகளாகியும் தற்போது வரை பயன்பாட்டிற்கு வரவில்லை.இதனால், குடிநீர் சுத்திகரிப்பு மையத்தைச் சுற்றிலும், செடி, கொடிகள் வளர்ந்து புதராக மாறிவிட்டது. மேலும், குடிநீர் சுத்திகரிப்பு மையம் சேதமடைந்து, அரசு பணம் வீணாகி விட்டதாக, பகுதிவாசிகள் புகார் தெரிவித்தனர்.எனவே, திருவள்ளூர் கலெக்டர், குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை நேரில் ஆய்வு செய்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.