42 சிறுபாசன ஏரிகளை சீரமைத்து தண்ணீரை சேமிக்க முயற்சி ரூ.2.65 கோடியில் புனரமைக்க திட்டம்
திருத்தணி, திருவள்ளூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி துறையின் கட்டுப்பாட்டில் உள்ள எட்டு ஒன்றியங்களில் முதற்கட்டமாக, 42 ஏரிகளை புனரமைத்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்தவும், தண்ணீரை சேமிக்கவும், மாநில நிதிக்குழு மானியம் மூலம், 2.65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாவட்ட நிர்வாகம் புதிய முயற்சி எடுத்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில், 14 ஒன்றியங்களில், மொத்தம், 526 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சிகளில் உள்ள சிறுபாசன ஏரிகளை ஒன்றிய நிர்வாகம் பராமரித்தும், புரணமைப்பு பணிகளும் செய்து வருகிறது. பெரிய அளவிலான ஏரிகளை பொதுப்பணித்துறையின் ஓர் அங்கமான நீர்வளத்துறையினர் பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் மாவட்டத்தில், 576 ஏரிகளை பொதுப்பணித் துறையும், 654 ஏரிகளை ஊரக வளர்ச்சி துறையினரும் பராமரித்து வருகின்றனர். இந்நிலையில், 14 ஒன்றியத்தில், எட்டு ஒன்றியங்களில் உள்ள, 42 சிறுபாசன ஏரிகளை புனரமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும், ஏரியில் தண்ணீரை சேமிக்கவும் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர் தீர்மானித்தனர். இதற்காக சிறுபாசன ஏரிகள் புனரமைப்பு திட்டம்-2024-25 ஆண்டு திட்டத்தின் கீழ், மாநில நிதி மற்றும் மாநில நிதிக்குழு மான்யம் மூலம், 2.65 கோடி ரூபாய் முதற்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளன. 42 சிறுபாசன ஏரிகள் சீரமைக்கும் பணிகள் வரும் 12ம் தேதி முதல் துவங்கப்படவுள்ளன. வட்டார வளர்ச்சி அலுவலர். உதவி ஒன்றிய பொறியாளர், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பணி மேற்பார்வையாளர் ஆகியோரால் தேர்வு செய்யப்பட்ட சிறுபாசன ஏரிகளில் நீர்பரப்பு எல்லையில் இருக்கும் குப்பைகள், கழிவுகள் மற்றும் தேவையில்லாத பொருட்களை அகற்றுதல் வேண்டும். மேலும் ஏரியில் துார்வாரி ஆழப்படுத்திட வேண்டும். அங்கு எடுக்கப்படும் மண்ணால் ஏரியின் கரைகளை பலப்படுத்த வேண்டும். மதகுகள் நீர்வரத்து கால்வாய் மற்றும் வெளியேறும் கால்வாய் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும். இதுதவிர ஏரியின் கரையின் மீது வளர்ந்துள்ள முட்செடிகள், கொடிகளை அகற்றுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ள வேண்டும். மேற்கண்ட பணிகள் அனைத்தும் இரு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என, கலெக்டர் பிரதாப் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மாவட்டத்தில், எங்கள் கட்டுப்பாட்டில் உள்ள, 654 ஏரிகளில் முதற்கட்டமாக, எட்டு ஒன்றியங்களில், 42 ஏரிகள் தேர்வு செய்துள்ளோம். இப்பணிகளுக்கு இம்மாதம், 11ம் தேதி டெண்டர் விடப்பட்டு, மறுநாள் முதல் பணிகள் துவங்குவதற்கு பணி உத்தரவு வழங்கப்படும். இந்த சிறுபாசன ஏரிகளை புரனமைப்பதன் நோக்கம் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயர்த்தவும், பருவ மழையின் தண்ணீரை ஏரியில் தேக்கி வைப்பதற்கும் ஏரிகளை சீரமைக்கும் பணிகள் நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். ஒன்றியம் பெயர், ஏரிகள் எண்ணிக்கை, நிதி லட்சத்தில் திருத்தணி - 2 - 84.10 திருவாலங்காடு - 7 - 53.30 ஆர்.கே.பேட்டை - 2 - 12.42 கும்மிடிப்பூண்டி - 2 - 10.95 மீஞ்சூர் - 2 - 15.66 திருவள்ளூர் - 8 - 46.90 பூண்டி - 18 - 110.44 கடம்பத்துார் - 1 - 5.760 மொத்தம்: 42 264.72 ★★