ரயிலில் சிக்கி முதியவர் பலி திருவள்ளூர் தட சேவை பாதிப்பு
சென்னை, புளியந்தோப்பு, கன்னிகாபுரத்தைச் சேர்ந்தவர் மகிமைதாஸ், 68. உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற, நேற்று காலை வியாசர்பாடி, ஜீவா ரயில் நிலையம் வந்தார்.இந்த நிலையத்தின் அருகே ரயில்வே கேபின் வழியாக, காலை 9:50 மணியளவில் தண்ட வாளத்தை கடந்து செல்ல முயன்றபோது,திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த விரைவு ரயில், இவர் மீது மோதியது.இதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் இன்ஜினின் கீழ் பகுதியில் சிக்கிக் கொண்டது. உடனடியாக, ஓட்டுநர் ரயிலை நிறுத்தினார். இதனால், பின்னால் வந்த திருவள்ளூர் - சென்னை கடற்கரை மின்சார ரயிலும் நிறுத்தப்பட்டது. இந்த பாதை, சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை நிலையத்துக்கு மாறி செல்லக்கூடிய பாதை என்பதால், திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.இதனால், அலுவலகங்கள், பள்ளி, கல்லுாரிகளுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டனர். சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பூர் ரயில்வே போலீசார், அவரது உடலை ரயில் இன்ஜினில் இருந்து அகற்றினர். தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதையடுத்து, மின்சார ரயில் சேவை காலை 10:30 மணிக்கு மேல் மீண்டும் இயங்க துவங்கியது. இந்த சம்பவத்தால், திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் தடத்தில், 45 நிமிடங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.