உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி

சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து முதியவர் பலி

திருவள்ளூர், சாலை பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உயிரிழந்தார்.திருவள்ளூர் அடுத்த அயத்துார் அருகே உள்ள புஜ்ஜன்கண்டிகை பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன், 70; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவர், நேற்று முன்தினம் இரவு 'பேஷன் புரோ' பைக்கில், அயத்துார் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றார்.திருவிழா முடிந்து வீடு திரும்பாததால், உறவினர்கள் இரவு முழுதும் அவரை தேடினர். நேற்று காலை 7:00 மணியளவில் அயத்துார் பகுதியில், 'சென்னை எல்லை சாலை' திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பைக்குடன் கிருஷ்ணன் விழுந்து, இறந்து கிடந்தது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாமல், பள்ளம் தோண்டிய நெடுஞ்சாலைத் துறையை கண்டித்தும், உயிரிழந்த கிருஷ்ணனின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரியும், அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர். செவ்வாப்பேட்டை மற்றும் பூந்தமல்லி போலீசார், உறவினர்களிடம் பேச்சு நடத்தினர். அதன்பின், அவர்கள் கலைந்து சென்றனர். சடலத்தை கைப்பற்றிய போலீசார், திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ