திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் கேன்டீன் அமைக்க எதிர்பார்ப்பு
திருவள்ளூர்:அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 'கேன்டீன்' வசதி ஏற்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை ஜே.என்.சாலையில் இயங்கி வருகிறது. இங்கு, தினமும் பல்வேறு சிகிச்சைக்காக, 3,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மேலும், 650 பேர் வரை உள் நோயாளிகளாக தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.மகப்பேறு, குழந்தைகள் நல பிரிவுகளில் தினமும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் தங்கி பிரசவம் மற்றும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், தினமும் 30-40 அறுவை சிகிச்சைகள் நடக்கின்றன. இதற்காக, நோயாளிகளுடன் உடன் உறவினர்களும் அவர்களுக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கின்றனர்.இந்த நிலையில், புதிய மருத்துவமனை வளாகம் கட்டும் பணிக்காக, ஐந்து ஆண்டுக்கு முன், அங்கிருந்த 'அம்மா' உணவகம் இடித்து அகற்றப்பட்டது. அதன் பின், இதுவரை மருத்துவமனை வளாகத்தில் உணவகம் எதுவும் இல்லை. மேலும், 'ஆவின்' பாலகமும் கடந்த ஆண்டு முதல் செயல்படாமல் உள்ளது.இதனால், நோயாளிகளுடன் வரும் உறவினர்கள் உணவருந்த, சாலையை கடந்து செல்ல வேண்டி உள்ளது. வயதானோர், பெண்கள் மற்றும் குழந்தைகள், அவ்வாறு சாலையை கடக்கும் போது, விபத்து அபாயத்தில் உள்ளனர்.எனவே, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அம்மா உணவகம் அல்லது கேன்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும்; ஆவின் பாலகமும் திறக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.