உரிமம் இன்றி செயல்படும் தொழிற்சாலைகள் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வருவாய் இழப்பு
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில் பொன்பாடி, அத்திப்பட்டு, காவேரிராஜபுரம், கூளூர், தொழுதாவூர், கூர்மவிலாசபுரம் என, 10க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தொழிற்சாலைகள் உள்ளன.இங்குள்ள பெரும்பாலான தொழிற்சாலைகள், உரிமம் (ரன்னிங் லைசென்ஸ்), சொத்துவரி, தொழில் வரி, பஞ்சாயத்து அப்ரூவல் பெறாமலேயே இயங்குவதால், உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இதனால் வளர்ச்சிப் பணிகளிலும் பாதிப்பு ஏற்படுகிறது. இரும்பு, ஆயில் போன்ற பொருட்களை உற்பத்தி செய்து தயாரிக்கும் நிறுவனங்களுக்கு, தொழில் உரிமம் சான்றிதழ் மிகவும் அவசியம். ஆனால், தொழில் நிறுவனங்களில் பெரும்பாலானவை தொழில் உரிமம் பெறாமலேயே நடத்தப்படுகிறது.இவ்வாறு தொழில் உரிமம் உள்ளிட்ட சான்றிதழ் பெறாமல் தொழிற்சாலை இயங்குவது சட்டப்படி குற்றம். முறையாக உள்ளாட்சி நிர்வாகங்களில் அனுமதி பெற்று நடக்காததால், உள்ளாட்சி நிர்வாகத்திற்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.இதனால், வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது. உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் தொழிற்சாலைகளுக்கு சென்று கேட்டால் போக்கு காட்டுகின்றனர். சில சமயங்களில், அதிகாரிகளுக்கு 'கட்டிங்' கொடுப்பதன் வாயிலாக, தொழில்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.இதுபோன்று உரிமம் பெறாமல் இயங்கும் தொழில் நிறுவனங்களில் எதிர்பாராத விதமாக ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், அரசு சார்பில் கிடைக்கும் எந்த பலனும் கிடைக்க வாய்ப்பில்லை. இது, தொழில்களை நடத்துவோருக்கு தெரிந்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.எனவே, தொழிற்சாலைகளுக்கு உடனடியாக தொழில் உரிமம் பதிவு செய்து, சான்றிதழ் பெற வேண்டும். உள்ளாட்சி நிர்வாகத்திற்கு வருவாய் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.