முதல்முறையாக மக்காச்சோளம் சாகுபடி: கூடுதல் பரப்பளவில் பயிரிட விவசாயிகள் ஆர்வம்
திருவள்ளூர், திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகள் முதல்முறையாக பயிரிட்ட மக்காச்சோளம், தற்போது நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி உள்ளது. இதனால், ஏற்கனவே பயிரிட்ட விவசாயிகளுடன், அருகில் உள்ளோரும் இம்முறை அதிக பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட ஆர்வமாக உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில், நெற்பயிர் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தபடியாக கரும்பு, வாழை, மா போன்ற தோட்டக்கலை பயிர் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கால்நடை, கோழி தீவனம், மதிப்பூட்டப்பட்ட உணவு வகை, எத்தனால் போன்றவற்றுக்கு, மக்காச்சோளம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.தமிழகத்தில் ஆண்டுக்கு, 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவையுள்ள நிலையில், தற்போது 30 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 20 லட்சம் டன், ஆந்திரா, கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகிறது.கோவை வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறை இணைந்து, மாவட்டத்தில் முதல்முறையாக முன்னோடி திட்டம் அடிப்படையில், மக்காச்சோளம் சாகுபடியை, கடந்த ஜன., மாதம் அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கலாதேவி கூறியதாவது:திருவள்ளூர் மாவட்டத்தில், முதல்முறையாக பரிசோதனை அடிப்படையில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி திட்டம், கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு, திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய ஐந்து ஒன்றியங்களில் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.அந்த பகுதிகளில், 50 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டது. தற்போது, மக்காச்சோளம் நன்றாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராக உள்ளது. இதன் காரணமாக, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகள் இந்த ஆண்டு கூடுதல் பரப்பளவில் பயிரிட தயாராக உள்ளனர்.மேலும், அருகிலுள்ள மற்ற விவசாயிகளும் மக்காச்சோளம் பயிரிட ஆர்வமாக உள்ளனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.5 ஏக்கரில் பயிரிடுவோம்நானும், எனது மாமாவும் எங்களது வயலில், 2 ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளோம். வேளாண் துறையினர் அதற்கு தேவையான விதை, உரங்களை வழங்கி, அவற்றை வளர்ப்பது குறித்து பயிற்சி அளித்தனர். அதன்படி, தற்போது மக்காச்சோளம் நன்றாக வளர்ந்துள்ளது. இன்னும் 10 - 15 நாட்களில் அறுவடைக்கு தயாராகிவிடும். எங்கள் பகுதியிலேயே தனியார் எத்தனால் தொழிற்சாலை உள்ளதால், அவர்களிடம் விற்பனை செய்து விடுவோம். இந்த முறை, 5 ஏக்கர் பரப்பளவில் பயிரிட முடிவு செய்துள்ளோம்.-ரா.சுரேஷ், சேர்பேடு, கும்மிடிப்பூண்டி.தர்ப்பூசணி விவசாயிகள்மக்காச்சோளம் பயிரிட முடிவுஎங்கள் நிலத்தில் முதல்முறையாக மக்காச்சோளம் பயிரிட்டுள்ளதை மற்ற விவசாயிகள் வந்து வித்தியாசமாக பார்த்து விட்டுச் சென்றனர். மக்காச்சோளம் நன்றாக வளர்ந்ததும், அவர்கள் ஆச்சரியமாக வந்து பார்த்து விசாரித்தனர். தற்போது, மக்காச்சோளம் நன்றாக வளர்ந்துள்ளதால், அவர்களும் மக்காச்சோளம் பயிரிட ஆர்வமாக கேட்டுச் சென்றுள்ளனர். தற்போது, தர்ப்பூசணி விலையில்லாத நிலையில், அவற்றை பயிரிட்டோர் இம்முறை மக்காச்சோளம் பயிரிட முடிவு செய்துள்ளனர்.-ஜி.விசுவாசம், சேர்பேடு, கும்மிடிப்பூண்டி.மாற்றுப்பயிர் செய்ய விருப்பம்மாற்று பயிர் விவசாயத்தில் ஈடுபட ஆர்வமாக இருந்த எனக்கு, வேளாண் துறையினர் அளித்த ஊக்கத்தால், முதல்முறையாக 1 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டேன். வேளாண் துறையினரிடம் அவ்வப்போது சந்தேகத்தை கேட்டறிந்து, தற்போது அறுவடை செய்து விட்டேன். இம்முறை கூடுதல் பரப்பளவில் பயிரிட உள்ளேன்.- எம்.முனிவேல், மங்களம், ஆரணி.