உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கனமழைக்கு முன்பே நிரம்பிய ஆரணி ஆறு விவசாயிகள் மகிழ்ச்சி

கனமழைக்கு முன்பே நிரம்பிய ஆரணி ஆறு விவசாயிகள் மகிழ்ச்சி

பொன்னேரி, வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் முன்பே, நீர்வரத்து அதிகரித்து ஆரணி ஆறு நிரம்பியுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆந்திர மாநிலத்தில் துவங்கும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி, தத்தமஞ்சி என, 127 கி.மீ., பயணித்து, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரி வழியாக, வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. தமிழக பகுதியில் ஆரணி ஆற்றின் குறுக்கே ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம், சிட்ரபாக்கம், பனப்பாக்கம், ஆண்டார்மடம் உள்ளிட்ட இடங்களில் அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகள் உள்ளன. மழைக்காலங்களில் இவற்றில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர், அந்தந்த பகுதிகளின் நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும், விவசாயத்திற்கும் பயனுள்ளதாக உள்ளது. கடந்த 20 நாட்களுக்கு முன், ஆரணி ஆற்றின் பல்வேறு பகுதிகள் வறண்டு கிடந்தன. இந்நிலையில், சில நாட்களாக அவ்வப்போது பெய்து வரும் மழையால், ஆரணி ஆற்றிற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கட்டு மற்றும் தடுப்பணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும் முன்பே, ஆரணி ஆறு நிரம்பியது, விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், ஆற்றின் கரையோரங்களில் உள்ள விவசாய ஆழ்துளை மோட்டார்களின் நிலத்தடி நீர்மட்டமும் அதிகரித்துள்ளதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். அடுத்து வரும் நாட்களில் கனமழை பெய்வதற்கான சூழல் இருப்பதால், ஆரணி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ