மெட்ரோ குடிநீர் குழாய் புதைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அருகே விவசாய விளை நிலங்களில் மெட்ரோ குடிநீர் குழாய் புதைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்காலிகமாக பணிகள் நிறுத்தப்பட்டன. கும்மிடிப்பூண்டி அடுத்த மாதர்பாக்கம் அருகே தேர்வாய்கண்டிகை - கண்ணன்கோட்டை நீர்தேக்கத்தில் இருந்து மாநெல்லுார் சிப்காட் வளாகத்திற்கு மெட்ரோ குடிநீர் கொண்டு செல்லும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பூவலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட வாணியமல்லி கிராமத்தில் விவசாயி நிலங்கள் வழியாக, குழாய் புதைக்கும் பணிகளை மேற்கொள்ள பொக்லைன் இயந்திரங்களுடன், மெட்ரோ குடிநீர் திட்ட அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் போலீஸ் பாதுகாப்புடன் நேற்று வாணியமல்லி கிராமத்திற்கு சென்றனர். தகவல் அறிந்து சென்ற விவசாயிகள், 'முன் அறிவிப்பு எதுவுமில்லாமல் எப்படி பட்டா நிலத்தில் குழாய் புதைக்கும் பணிகளை மேற்கொள்ள முடியும்' என எதிர்ப்பு தெரிவித்து, அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். கிராம மக்கள் எதிர்ப்பால், குழாய் புதைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.