அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் தொடர் மழையால் சாய்ந்தன விவசாயிகள் கவலை
திருத்தணி:திருத்தணி தாலுகாவில் பெரியகடம்பூர், கன்னிகாபுரம், என்.என்.கண்டிகை, கிருஷ்ணசமுத்திரம், நெமிலி, கே.ஜி.கண்டிகை, மத்துார் உட்பட 25க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், 1,200 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது, நெற்பயிர் அறுவடைக்கு தயாரான நிலையில், ஒரு வாரமாக பலத்த மழையுடன் காற்று வீசுவதால், நெற்கதிர்கள் தரையில் சாய்ந்துள்ளன. சில வயல்வெளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், நெல் முளைக்கும் அபாய நிலையும் உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதாலும், வயல்வெளியில் ஈரப்பதம் இருப்பதாலும், நெல் அறுவடை செய்வதற்கு இயந்திரம் போக முடியாத நிலை உள்ளது. இதனால், விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்குள் அறுவடை செய்யவில்லை எனில், நெற்கதிர்கள் வயல்வெளியிலேயே தண்ணீரில் மூழ்கி வீணாகும். எனவே, மழையால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு நிவாரண தொகை வழங்க வேண்டும் என, கலெக்டருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.