நகைக்காக மூதாட்டியை கொலை செய்து சூட்கேசில் கொண்டு வந்த தந்தை, மகள் கைது
மீஞ்சூர்:ஆந்திர மாநிலம் நெல்லுாரில் இருந்து, சென்னை நோக்கி வந்த புறநகர் ரயில் மீஞ்சூர் ரயில் நிலையம் வந்தது. அதில் இருந்து இறங்கி இருவர் பெரிய டிராலி சூட்கேஸ் ஒன்றை நடைமேடையில் இறக்கி வைத்தனர்.சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, சூட்கேசை அங்கு வைத்து விட்டு, நடந்து சென்றனர். இது பயணியர் இடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் அங்கிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசாரிடம் தெரிவித்தனர்.அவர்கள் ரயிலில் ஏற முற்பட்டபோது, போலீசார் அவர்களை பிடித்து, சூட்கேஸ் இருந்த பகுதிக்கு அழைத்து சென்றனர். சூட்கேஸ் ரத்த கறையுடன் இருப்பதை கண்டனர்.இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்திய போது, அவர்கள் ஆந்திர மாநிலம் நெல்லுார் டவுன் சந்தைபேட்டை பகுதியை சேர்ந்த சுப்ரமணி, 43, மற்றும் அவரது 17 வயது மகள் என தெரிந்தது.நகைக்கு ஆசைப்பட்டு 60 வயதான மூதாட்டி ஒருவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, சூட்கேசில் வைத்து எடுத்து வந்ததாக தெரிவித்தனர்.தொடர் விசாரணையில், நெல்லுார் டவுன் பகுதியை சேர்ந்தவர் ரமணி, 60. இவர் சகஜமாக பேசக்கூடியவர். நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் கடைக்கு செல்வதற்காக, சுப்ரமணி வீட்டு வழியாக சென்றபோது, அவர்களிடம் சிறிது நேரம் பேசியுள்ளார்.சுப்ரமணி மற்றும் அவரது மகள் இருவரும் ரமணியை வீட்டிற்குள் அழைத்து சென்று பேசிகொண்டிருந்தனர். அப்போது திடீரென ரமணி கழுத்தில் இருந்த ஆறு சவரன் நகையை பறித்து உள்ளனர்.அவர் தடுக்க முயன்ற போது, பெட்ஷீட்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்து உள்ளனர். சடலத்தை மறைக்க திட்டமிட்டு, கை, கால்களை மடக்கி பெரிய டிராலி சூட்கேஸ் ஒன்றில் வைத்து அடைத்து உள்ளனர்.இரவு வரை காத்திருந்தவர்கள், தெருவில் யாரும் இல்லாத நேரத்தில் வெளியூர் செல்வதுபோல், சூட்கேசை எடுத்துக்கொண்டு நெல்லுார் ரயில் நிலையம் வந்து, அங்கிருந்து சென்னை செல்லும் புறநகர் ரயிலில் வந்துள்ளனர்.மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு வந்ததும், அங்கு இறங்கி சூட்கேசை வைத்து விட்டு, தப்ப முயன்றபோது போலீசாரிடம் சிக்கினர்.இந்நிலையில் காணாமல் போன ரமணி குறித்து உறவினர்கள் நெல்லுார் டவுன் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் தந்தை, மகளை கைது செய்தனர்.