பெற்றோரை இழந்த குழந்தைகள் கல்வி தொடர மாதம் ரூ.2,000 நிதியுதவி
திருவள்ளூர், பெற்றோரை இழந்த, வறுமையில் உள்ள குழந்தைகள் கல்வியை தொடர, மாதம் 2,000 ரூபாய் நிதியுதவி பெறும் திட்டத்தில் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில், பெற்றோர் இருவர் அல்லது ஒருவரை இழந்து, வறுமையில் உள்ள குழந்தைகளின் பள்ளி படிப்பு வரை, இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர, 18 வயது வரை, 'அன்பு கரங்கள்' நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், மாதம் 2,000 ரூபாய் உதவித்தொகை தமிழக அரசால் வழங்கப்படுகிறது . இத்திட்டத்தின் கீழ் பயன்பெற, பெற்றோரை இழந்த ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் ஆதரவு தேவைப்படும் குழந்தைகள், ரேஷன் கார்டு, ஆதார், வயது சான்று மற்றும் வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் ஆகியவற்றுடன், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் விண்ணப்பிக்கலாம். மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடமும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.