மீன்பிடிதொழிலில் மோதல் சப்- கலெக்டர் ஆபிஸ் முற்றுகை
பொன்னேரி, :பழவேற்காடு அருகே உள்ள அவுரிவாக்கம் மேல்குப்பம் கிராமத்தினர், அங்குள்ள பழவேற்காடு ஏரியில் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் 'பாடு'பழவேற்காடு ஏரியில் மீன்பிடிக்கின்றனர். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த, மீனவர் ஒருவர் தனக்கு தனிபாடு வேண்டும் என கிராம நிர்வாகிகளிடம் கேட்டு உள்ளார்.கிராம நிர்வாகிகள் கூட்டாக தொழில் செய்வதுதான் வழக்கம் என தெரிவித்து உள்ளனர். இதனால் இருதரப்பினர் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. இப்பிரச்னை தொடர்பாக கடந்த ஒரு ஆண்டாக, மீனவர்கள் காவல்நிலையம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை, ஆலோசனை கூட்டம் என திரிகின்றனர். இதனால் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.இந்நிலையில், நேற்று மேற்கண்ட கிராமத்தை ஒரு தரப்பு மீனவர்கள், பொன்னேரி சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, மீன்பிடி தொழில் தொடர்பான பிரச்னைக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்தி தரவேண்டும் என வலியுறுத்தி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.சப்-கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வகுமார், மீனவர்களிடம் பேச்சு நடத்தினார். விரைவில் இரு தரப்பினர் இடையே சமாதான பேச்சு நடத்தி, சுமூக தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். அதையடுத்து மீனவ கிராமத்தினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.