உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூண்டியில் வெளியேறும் உபரி நீரில் மீன் பிடிப்பு

பூண்டியில் வெளியேறும் உபரி நீரில் மீன் பிடிப்பு

திருவள்ளூர்: பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், வெளியேறும் தண்ணீரில் உள்ள மீன்களை, மீனவர்கள் வலை வீசி பிடித்து வருகின்றனர். திருவள்ளூர் அடுத்த பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.23 டி.எம்.சி.,யில், தற்போது, 2.58 டி.எம்.சி., தண்ணீர் நிரம்பி உள்ளது. திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் பருவ மழையால், நீர்த்தேக்கத்திற்கு, 3,060 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நீர்த்தேக்கத்தின் பாதுகாப்பு கருதி, கடந்த 10 நாட்களுக்கும் மேலாக, பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து, உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. அந்த நீர், தாமரைப்பாக்கம், ஜனப்பன்சத்திரம், மீஞ்சூர் வழியாக எண்ணுார் அருகே வங்க கடலில் கலக்கிறது. இந்நிலையில், நீர்த்தேக்கத்தில் இருந்து திறக்கப்பட்ட நீரில், அதிகளவில் மீன்களும் வெளியேறி வருகின்றன. அந்த மீன்களை மீனவர்கள், மதகு அருகில் நீர் வெளியேறும் இடத்தில் வலை வீசி பிடித்து வருகின்றனர். கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட பல வகையான மீன்கள், மீனவர் வலையில் சிக்குகின்றன. பிடிபட்ட மீன்களை, பூண்டி நீர்த்தேக்க கரை அருகிலேயே, மக்களிடம் விற்பனை செய்து வருகின்றனர். உடனடியாக பிடிபட்ட மீன்களை, மக்களும் ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ