வெள்ள கால மீட்பு நடவடிக்கை திருவள்ளூரில் 64 குழு நியமனம் முன்னேற்பாட்டு பணியில் மாவட்ட நிர்வாகம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதியாக, 133 இடங்கள் கண்டறியப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது. மீட்பு நடவடிக்கைக்காக, 64 குழு அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை, வரும் 16ம் தேதி துவங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில், பொன்னேரியில் ரெட்டிபாளையம், ஆலாடு, தத்தமஞ்சி, வஞ்சிவாக்கம், பெரும்பேடு குப்பம், விச்சூர், ஆவடியில் திருநின்றவூர் மற்றும் பருத்திப்பட்டு ஆகிய எட்டு இடங்களில், மிக அதிகளவு பாதிப்பு ஏற்பட்டது. மேலும், பொன்னேரி, ஆவடி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. கடந்த காலங்களில் மாவட்டத்தில், கனமழையால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளாக, 133 இடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. நடப்பாண்டு அதி கனமழை பெய்தால் ஏற்படும் வெள்ள பாதிப்பில் மீட்பு பணிக்காக, மாவட்ட நிர்வாகம் தயார்நிலையில் உள்ளது. இதுகுறித்து, கலெக்டர் பிரதாப் கூறியதாவது: திருவள்ளுர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள வருவாயை, ஊரக வளர்ச்சி, பொதுப்பணி, தீயணைப்பு மற்றும் மீட்பு, சுகாதார துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். மிக அதிகமாக பாதிப்பு ஏற்படும் பகுதி - -8, அதிகம் பாதிப்பு ஏற்படும் பகுதி - 39, மிதமாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி - -44 மற்றும் குறைவாக பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதி- - 42 என, மொத்தம் 133 பகுதிகள் கண்டறியப்பட்டு உள்ளன. பயிற்சி அப்பகுதிகளில் மீட்பு நடவடிக்கைக்காக, 42 மண்டல குழு, 22 கூடுதல் குழு என, 64 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. மேலும், பேரிடர் ஏற்பட்டால், முன்கூட்டி தகவல் அளிக்க 10 பேர் கொண்ட ஒரு குழு, தலா 20 பேர் கொண்ட 2 தேடுதல் மற்றும் மீட்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளோரை வெளியேற்ற, 51 பேர் கொண்ட மூன்று குழு மற்றும் 61 பேர் கொண்ட தற்காலிக தங்கும் முகாம் குழு - 9 அமைக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 4,480 முதல் நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது. மேலும், 463 தன்னார்வலர்களுக்கு, 'ஆப்த மித்ரா' திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. மாநில பேரிடர் மீட்பு படையில் பயிற்சி பெற்ற 50 அலுவலர்களும் தயார் நிலையில் உள்ளனர். மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு வைரவன்குப்பம், காட்டுப்பள்ளி புயல் பாதுகாப்பு மையங்கள், திருப்பாலைவனம், ஆண்டார்மடம், பள்ளிப்பாளையம், எளாவூர் -1 மற்றும் மெதிப்பாளையம் ஆகிய ஐந்து இடங்களில் அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 669 தற்காலிக தங்குமிடங்களும் தயார் நிலையில் உள்ளன. கால்நடைகளை பாதுகாப்பாக பராமரிக்க, 64 தற்காலிக தங்குமிடம் மற்றும் 144 முதல்நிலை பொறுப்பாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். சுகாதார துறை வாயிலாக, அரசு மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் வசதிகளுடன், 42 மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது. நடவடிக்கை மாவட்டத்தில் 65,170 மணல் மூட்டை, 5,682 சவுக்கு கம்பம், 34 ஜே.சி.பி., 95 பொக்லைன், 141 படகு, 180 நீர் இறைக்கும் மோட்டார், 179 ஜெனரேட்டர், 30 தண்ணீர் லாரி, 2,190 மின்கம்பம் உள்ளிட்டவையும் தயார் நிலையில் உள்ளன. மாவட்டத்தில் 476 கி.மீ.,க்கு மழைநீர் வடிகால்வாய் துார் வாரப்பட்டு உள்ளது. நீர்வள துறையின் கட்டுப்பாட்டி ல் உள்ள ஆரணியாறு வடிநில கோட்டம் மற்றும் கொசஸ்தலையாறு வடிநில கோட்டத்தின் ஏரிகளுக்கு நீர்வரத்து கால்வாய்கள், நீர் வெளியேறும் கால்வாய்களில், நீர்வரத்து தங்கு தடையின்றி வெளியேறவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மக்கள் மற்றும் மீனவர்கள், அரசால் அறிவிக்கப்படும் வெள்ளம் மற்றும் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை செய்தியை அறிந்து, அதன்படி செயல்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
கட்டுப்பாட்டு அறை
மக்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க, மாவட்ட பேரிடர் தடுப்பு கட்டுப்பாட்டு அறைக்கான கட்டணமில்லா '1077' என்ற தொலைபேசி எண் 24 மணி நேரமும் இயங்கி வருகிறது. கட்டுப்பாட்டு அறை - 044 - -2766 4177, 044 - -2766 6746, வாட்ஸாப் எண் - 94443 17862, 94989 01077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.