உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்தவிப்பு!: நள்ளிரவில் மின் தடையால் மக்கள் அவதி

குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த வெள்ளம்தவிப்பு!: நள்ளிரவில் மின் தடையால் மக்கள் அவதி

திருவள்ளூரில் நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்ததால், நள்ளிரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கும்மிடிப்பூண்டி பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்துள்ளதாலும், மின்தடையாலும் மக்கள் கடும் அவதியடைந்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில், கடந்த வாரம் பலத்த மழை பெய்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மழை இல்லாத நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை பலத்த மழை பெய்தது.திருவள்ளூரில் நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி 1.5 செ.மீட்டர் மழை பதிவாகியது. மரக்கிளை மற்றும் மின் ஒயர் அறுந்து விழுந்ததால், நள்ளிரவு 3:00 மணி முதல் நேற்று காலை 7:00 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அறுந்து விழுந்த மின் ஒயரை சரிசெய்ததும், மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவில் துவங்கிய மழை, அதிகாலை வரை பெய்தது. பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்ததால், நள்ளிரவு முதல் அதிகாலை வரை மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.கடந்த சில தினங்களாக பெய்த தொடர் மழையால், கோட்டக்கரை அண்ணா நகரில் உள்ள சாய்பாபா நகர் முதல் தெரு, புதுகும்மிடிப்பூண்டி, பாலகிருஷ்ணாபுரம், கோரிமேடு ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன், அவர்களின் சுகாதாரமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.சென்னை --- கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் சந்திப்பு, தாசில்தார் அலுவலகம், ஓபுளாபுரம், தச்சூர் ஆகிய பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் குளம் போல் மழை வெள்ளம் தேங்கியது. இதனால், அப்பகுதிகளை கடக்க வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில் இருந்து கோட்டக்கரை வழியாக பேரூராட்சி அலுவலகம் வரையிலான சாலை, கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாக பராமரிப்பில் உள்ளது. அந்த சாலையில், பி.டி.ஓ., அலுவலகம், வேளாண் அலுவலகம், வட்டார கல்வி அலுவலகம் என ஏராளமான அரசு துறை சார்ந்த அலுவலகங்கள் உள்ளன. முக்கியமாக, தினசரி நுாற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்லும் கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையும் அந்த சாலையில் அமைந்துள்ளது. இது தவிர தினசரி, அந்த சாலை வழியாக ஆயிரக்கணக்காக மாணவியர், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று வருகின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த அந்த சாலை பல மாதங்களாக குண்டும் குழியுமாக உள்ளது. தற்போது சாலை பள்ளங்களில் மழைநீர் தேங்கி குட்டைகள் போல் காட்சியளிக்கின்றன. போக்குவரத்துக்கு லாயக்கற்று மோசமான நிலையில் உள்ளது.இதேபோல் ஆர்.கே., பேட்டை அடுத்த விளக்கணாம்புடி புதுார் கிராமத்தில் அமைந்துள்ளது அரசு ஆரம்ப சுகாதார நிலையம். இந்த மருத்துவமனைக்கு, சுற்றுப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை மற்றும் பரிசோதனைக்காக தினசரி வந்து செல்கின்றனர்.மருத்துவமனையின் நுழைவாயில் எதிரே மழை நீர், குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் தார் சாலை மேடு பள்ளமாக அமைக்கப்பட்டுள்ளதால் ஒருநாள் மழை பெய்தாலும் பல நாட்களுக்கு மழை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் மருத்துவமனைக்கு வரும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

துணை மின்நிலைய வளாகத்தில் மழைநீர் தேக்கம் @

@பொன்னேரி வேண்பாக்கம் பகுதியில், 33 கே.வி., துணை மின்நிலையம் அமைந்து உள்ளது. இங்கிருந்து, பொன்னேரி நகரம், அனுப்பம்பட்டு, திருவேங்கிடபுரம், பெரும்பேடு, ரெட்டிப்பாளையம், சின்னகாவணம், உப்பளம், எலவம்பேடு என, 100க்கும் அதிகமான கிராமங்களுக்கு மின்வினியோகம் நடைபெறுகிறது.கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையால் துணை மின்நிலைய வளாகம் முழுதும் மழைநீர் தேங்கி உள்ளது. அங்குள்ள அலுவலக கட்டடங்கள், மின்கட்டணம் செலுத்துமிடம், ஆப்ரேட்டர் அறை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் தேங்கி இருப்பதால், மின்பயனீட்டாளர்கள் பல்வேறு தேவைகளுக்கு அங்கு சென்று வரும்போது சிரமத்திற்கு ஆளாகின்றனர்.கடந்த, 1955ல் அமைக்கப்பட்ட இந்த துணை மின்நிலையம், தரம் உயர்த்தப்படாமலும், அத்யாவசிய கட்டமைப்பு மேற்கொள்ளப்படாமல் உள்ளது. மின்மாற்றிகள், மின்வினியோகம் செய்யும் மின்சாதனங்கள் உள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குவதால், மின்பராமரிப்பு பணிகளும், மின்வினியோகமும் பாதிக்கிறது.துணை மின்நிலைய வளாகத்தில் மழைநீர் தேங்குவதை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்கவும், தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்மபடுத்தவும் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.- நமது நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
அக் 20, 2024 17:47

மழை நின்னுடுச்சாம். போய் கண்டதை வாங்கி துண்ணுட்டு குப்பைகளை தெருவில் கொட்டிட்டு போங்க. சாக்கடை அடைச்சு அடுத்த மழைக்கு மிதக்க வேண்டாமா?