சீசன் முடிந்தும் கேளம்பாக்கத்தில் தங்கியுள்ள வெளிநாட்டு பறவைகள்
வழக்கமான சீசன் காலம் முடிந்த பிறகும், சென்னை கேளம்பாக்கம் பகுதியில், 14 வகையான வெளிநாட்டு பறவைகள் முகாமிட்டுள்ளன.பொதுவாக ஆண்டு தோறும், செப்., - அக்., மாதங்களில் வெளிநாட்டு பறவைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகின்றன. இந்த பறவைகள், திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு முதல் திருநெல்வேலி மாவட்டம் கூந்தன்குளம் வரையிலான பல்வேறு நீர்நிலைகளில் தங்கி செல்கின்றன.கோடையின் தாக்கம் அதிகரிக்கும் நிலையில், மே முதல் வாரத்துக்குள், வெளிநாட்டு பறவைகள் திரும்பி செல்வது வழக்கம். தமிழகத்தின் பல்வேறு நீர்நிலைகளிலும் வெளிநாட்டு பறவைகள் திரும்பி சென்று விட்ட நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பழைய மாமல்லபுரம் சாலைக்கு இடைப்பட்ட கேளம்பாக்கம், நெமிலிச்சேரி பகுதி நீர்நிலைகளில் இன்னும் முகாமிட்டுள்ளன.இப்பகுதி வனத்துறையால் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படாத நிலையில், இங்கு அரிய வகை பறவைகள் தங்கி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, தி நேச்சர் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:தமிழகத்துக்கு வரும் பெரும்பாலான வெளிநாட்டு பறவைகள், ஏப்., இறுதியில் அல்லது மே முதல் வாரத்திற்குள் திரும்பி சென்றுவிடும். குறிப்பிட்ட சில பறவைகள், ஆக., இறுதியில், சீசன் துவங்கும் முன் வருகின்றன. மற்ற பறவைகள் சென்ற பிறகும் சில காலம் இங்கு தங்குகின்றன.குறிப்பாக இனப் பெருக்க பருவம் எட்டாத பறவைகள், தங்களின் பூர்வீகத்திற்கு செல்லாமல், தேவையான உணவு கிடைக்கும் வரை, கூடுதல் காலம் இங்கேயே தங்கும். இந்த வகையில், சாதா உள்ளான், செங்கால் உள்ளான், பெரிய பூநாரை, மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி உள்ளிட்ட, 14 வகையான பறவைகள் கேளம்பாக்கம், நெமிலிச் சேரி பகுதியில் தங்கியுள்ளன.வெளியாட்கள் தொந்தரவு இல்லாத நிலையில், தொடர்ந்து தங்குகின்றன. இப்பகுதியின் சூழலியல் சிறப்பு இவற்றுக்கு ஏற்றதாக இருப்பதே இதற்கு காரணம். இந்த சூழலியல் தன்மையை பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
எந்தெந்த பறவைகள்?
செங்கால் உள்ளான், புள்ளி செங்கால் உள்ளான், பெரிய பூநாரை, வளைமூக்கு பெருங்கண்ணி, அரிவாள் மூக்கு உள்ளான், சாம்பல் உப்புக்கொத்தி, மங்கோலிய பட்டாணி உப்புக்கொத்தி, பெரிய பட்டாணி உப்புக்கொத்தி, வளைமூக்கு மண் கொத்தி, டெரக் மண் கொத்தி, பச்சைக்கால் உள்ளான், பொரி மண் கொத்தி, சிறு கொமு உள்ளான், மெல்லிய அலகு கடற்காக்கை. - நமது நிருபர் -