போதை நபருக்கு அறிவுரை கூறிய காங்., பிரமுகர் அடித்துக்கொலை
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே. பேட்டையில் நெசவாளரை அடித்துக்கொலை செய்த, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த அம்மையார்குப்பத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன், 54. அம்மையார்குப்பம் காங்., நகர துணை செயலர். விசைத்தறி நெசவு தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் பின்புறமுள்ள விசைத்தறி கூடத்தில் நெசவில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவில் சிறுநீர் கழிக்க வெளியில் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. காலையில் அவரது குடும்பத்தினர் தேடிய போது, தறிக்கூடத்தின் பின்புறம் திறந்த வெளியில் ரத்தக்காயத்துடன் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்து ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.போலீசார் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 25, என்பவர் கஞ்சா போதையில் அந்த பகுதியில் அடிக்கடி பகுதிவாசிகளிடம் தகராறில் ஈடுபட்டு வந்தது தெரிந்தது. சமீபத்தில், ராஜேந்திரன் ஹரிகிருஷ்ணனுக்கு அறிவுரை கூறியதாகவும் அரிகிருஷ்ணன் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சந்தேகத்தின் பேரில் ஹரிகிருஷ்ணனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், ஹரிகிருஷ்ணன் ராஜேந்திரனை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.ராஜேந்திரன் நள்ளிரவில் வெளியில் வந்தபோது, காத்திருந்த ஹரிகிருஷ்ணன், அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொன்றதாக, போலீசார் தெரிவித்தனர்.இதையடுத்து ஹரிகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர்.