ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பு
திருத்தணி: அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே சாலையோரம் குப்பை கொட்டி எரிப்பதால் எழும் புகையால் வாகன ஓட்டிகள், நோயாளிகள் கடும் சிரமப் படுகின்றனர். திருத்தணி - நல்லாட்டூர் மாநில நெடுஞ்சாலை, பூனிமாங்காடு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தினமும், நுாற்றுக் கணக்கான புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில், ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே, மாநில நெடுஞ்சாலையோரம், ஊராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி எரிக்கின்றனர். அதிலிருந்து எழும் புகையால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகள் கடும் சிரமப் படுகின்றனர். வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் பலமுறை சாலையோரம் குப்பை கொட்டி எரிக்கக் கூடாது என ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையோரம் குப்பை எரிப்பதை தடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.