| ADDED : டிச 05, 2025 05:10 AM
திருத்தணி: திருத்தணி பகுதியில் நிலவி வரும் குறைந்த அழுத்த மின்சாரத்திற்கு நிரந்திர தீர்வு காணும் வகையில், புதிய வழித்தடங்களில் மின்வினியோகம் செய்யும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. திருத்தணி துணை மின்நிலையத்தில் இருந்து திருத்தணி நகராட்சி 21 வார்டுகள், மத்துார், அலுமேலுமங்காபுரம், முருக்கம்பட்டு, பொன்பாடி ஆகிய ஊராட்சிளுக்கு மின்வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், திருத்தணி நகரம் மற்றும் மேற்கண்ட ஊராட்சிகளில் பல மாதங்களாக குறைந்த அழுத்த மின்சாரம் வருவதால், அடிக்கடி மின்மாற்றிகள் பழுதாகி வந்தன. குறிப்பாக வணிக வளாகங்கள் மற்றும் தனியார் கம்பெனியிலும் அடிக்கடி மின் துண்டிப்பு நடப்பதால் கடும் அவதிப்பட்டு வந்தனர். இதையடுத்து, திருத்தணி துணை மின்நிலையத்தில் இருந்து, புதியதாக வழித்தடங்கள் ஏற்படுத்தி சீரான மின்சாரம் வழங்க மின்வாரிய கோட்டம் தீர்மானித்துள்ளது. இது குறித்து திருத்தணி பொறுப்பு கோட்ட செயற்பொறியாளர் முருகபூபதி கூறியதாவது: திருத்தணி அடுத்த அலுமேலுமங்காபுரம் பகுதியில் புதிய 'பீடர்' அமைத்து, அங்கிருந்து மேல்முருக்கம்பட்டு, ஏ.எம்.புரம், சிங்கராஜபுரம், பெரியார் நகர், கொத்துார், மத்துார் ஆகிய பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்கு, 39 புதிய மின்கம்பங்கள் நடப்பட்டு மின்வினியோகம் செய்வதற்கு தயார் நிலையில் உள்ளோம். திருத்தணி அடுத்த வேலஞ்சேரியில் புதிய 'பீடர்' அமைத்து, அங்கிருந்து திருத்தணி புதிய பைபாஸ் சாலை, ஆசிரியர் நகர், காசிநாதபுரம் மற்றும் வேலஞ்சேரி ஆகிய பகுதிகளுக்கு சீரான மின்விநியோகம் செய்வதற்கு, புதிய 15 மின்கம்பங்கள் அமைக்கும் பணி ஓரிரு நாளில் முடிவடையும். வரும் 15 ம் தேதிக்கு பின் மேற்கண்ட வழித்தடங்களில் மின்வினியோகம் துவங்கப்படும். அதன்பின், குறைந்த அழுத்த மின்சாரம் நிரந்தரமாக தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.