அரசு நிலம் ஆக்கிரமித்து வேலி அமைப்பு காவல் நிலையம் முற்றுகையால் பரபரப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி ஒன்றியம் சித்துக்காடு ஊராட்சியில் 150 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு நியாய விலை கடை இல்லாததால் இரண்டு கிலோ மீட்டர் துாரம் சென்று பொருட்களை வாங்கி வருகின்றனர்.இந்நிலையில் பொதுமக்கள் கோரிக்கையை அடுத்து ஊராட்சி நிர்வாகத்தினர் மாவட்ட நிர்வாகம் உத்தரவுப்படி திரவுபதி அம்மன் கோவில் பின்புறம் சர்வே எண் 162/2, 162/3ல் ஆதிதிராவிடர் நல குடியிருப்பு பகுதியில் அரசு நிலத்தில் புதிய நியாய விலை கடை கட்டும் இடம் தேர்வு செய்தனர். இதையடுத்து 2022-23 ஜனவரியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 16 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கட்டும் பணி துவங்கியது. இந்நிலையில் இதே பகுதியை சேர்ந்த குமாரி தரப்பினர் இந்த நிலம் எங்களுடையது என கூறி தகராறில் ஈடுபட்டு கடந்த பிப்ரவரியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில் நியாயவிலைக்கடை கட்டும் இடம் அரசுக்கு சொந்தமானதெனவும், எவ்வித ஆதாரமும் இல்லாததால் குமாரி தரப்பினர் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்வதாக கடந்த ஏப்ரலில் உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது.இந்நிலையில் நேற்று குமாரி மற்றும் அவரது மகன்கள் நியாய விலை கடை கட்டடம் பணி நடந்து வரும் இடத்தை சுற்றி இரும்பு முள்வேலி அமைக்கும் பணியில் ஈடுட்டனர். தகவலறிந்த ஊராட்சி மன்ற தலைவர் வேலுச்சாமி அளித்த புகாரின்படி வெள்ளவேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முள்வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தினர்.மேலும் பகுதிவாசிகள் வெள்ளவேடு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவர்களை கைது செய்ய வேண்டுமென கூறி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட பார்த்தசாரதி, 39, அறிவழகன், 38 ஆகிய இருவரையும் கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.