உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஆம்ஸ்ட்ராங் வழக்கில் என்கவுன்டர் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற அரசு தயார்

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் என்கவுன்டர் சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற அரசு தயார்

சென்னை, பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர், 'என்கவுன்டரில்' கொல்லப்பட்டது தொடர்பான விசாரணையை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற தயாராக உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.கடந்த ஜூலையில், ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர். பெரும்பாலானோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவலில் வைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர், என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.சம்பவம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணை கோரியும், போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக கொலை வழக்கு பதியவும் கோரி, வழக்கறிஞர் புகழேந்தி, மனுத் தாக்கல் செய்தார்.இம்மனு, நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எம்.சுதீர்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆஜராகி, ''என்கவுன்டர் தொடர்பான மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கை அரசுக்கு கிடைத்ததும், வழக்கை சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்ற தயாராக உள்ளோம்,'' என்றார்.இதையடுத்து, திருவேங்கடம் மரணம் குறித்த வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, மூன்று வாரங்களுக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !