காரில் குட்கா கடத்தியவர் 7 கி.மீ., துரத்தி சென்று பிடிப்பு
திருவாலங்காடு, திருத்தணி, நேரு நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 32; இவர், நேற்று காலை, ஆந்திர மாநிலம், நகரியைச் சேர்ந்த சுந்தரேசன் என்பவரிடம் இருந்து, குட்கா பொருட்களை வாங்கிக் கொண்டு திருவள்ளூர் பகுதியில் உள்ள கடைகளுக்கு விற்பனை செய்ய, 'ஹோண்டா மொபிலியோ' காரில் கடத்தி வந்தார்.திருவாலங்காடு அடுத்த, பட்டரைப்பெரும்புதுார் கூட்ரோடு அருகே வந்தபோது அப்பகுதியில் திருவாலங்காடு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்ததை பார்த்தவர், காரை திருப்பிக் கொண்டு திருவாலங்காடு வழியாக ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்திற்கு செல்ல முயன்றார். இதைக் கண்ட போலீசார் பின் தொடர்ந்து, 7 கி.மீ., துாரம் துரத்தி சென்று, திருவாலங்காடு அடுத்த, மோசூர் பகுதியில் மடக்கி பிடித்தனர்.இதையடுத்து, காரில் கடத்தி சென்ற 237 கிலோ ஹான்ஸ், குட்கா பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து பாலாஜியை கைது செய்த போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.