சுகாதார துறையினர் ஆய்வு
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், செவ்வாய் கிழமைகளில் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவது வழக்கம்.ஈகுவார்பாளையம் மருத்துவமனையில், சில மாதங்களாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், குழந்தைகளுக்கு போடப்படும் முத்தடுப்பு ஊசி இருப்பு இல்லை என்ற புகாரும் முன் வைக்கப்பட்டது.இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட சுகாதார அலுவலர் பிரியா ராஜ் தலைமையிலான குழுவினர், நேற்று ஈகுவார்பாளையம் மருத்துவமனையில் ஆய்வு செய்தனர்.ஆய்வின் முடிவில், ‛கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து உணவு வழங்காதது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். இனி வரும் காலங்களில் முறையாக ஊட்டச்சத்து உணவு வழங்கப்படும். குழந்தைகளுக்கான முத்தடுப்பு ஊசி தற்போது இருப்பு உள்ளது' என, சுகாதார துறையினர் தெரிவித்தனர்.