உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கும்மிடியில் கனமழை: பழவேற்காடில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கும்மிடியில் கனமழை: பழவேற்காடில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.இதனால் கடலோர கடற்கரை மாவட்டங்களில் மிக கனமழைக்கும், வங்கக்கடலில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது.நேற்று முன்தினம் இரவு முதல் கடலோர பகுதியான பழவேற்காடில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கடலில் சீற்றம் அதிகமாக இருக்கிறது. ராட்சத அலைகள், 10 - 15 அடி வரை எழும்புவதால் கடற்கரை பகுகளில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது.கடல் அரிப்பு காரணமாக, கடலுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்குமான இடைவெளி குறைந்து உள்ளதால் மீனவர்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.ஏரியின் கரையோரங்களில் இருக்கும் படகுகள் மற்றும் வலைகள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, கயிறுகள் உதவியுடன் கட்டி வைக்கப்பட்டு உள்ளன.பழவேற்காடு ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து, கோட்டைகுப்பம், ஆண்டிகுப்பம் மீனவ கிராமங்களை சூழ்ந்து உள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு மழைபொழிவு அதிகம் இருக்கும் நிலையில், குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் உருவாகி உள்ளது.மீன்வளத்துறையினர் எச்சரிக்கையை தொடர்ந்து, கடந்த இரு தினங்களாக மீனவர்கள் மீன்பிடி தொழிலை தவிர்த்து உள்ளனர். மீனவர்கள் படகுகள் மற்றும் வலைகள் பணியின்றி ஓய்வெடுக்கின்றனர்.மீன்பிடி படகுகள், வியாபாரிகள், மீன்களை பதப்படுத்தும் வாகனங்கள், மீன்மார்க்கெட்டிற்கு வரும் வாடிக்கையாளர்கள் என எப்போதும் பரபரப்பாக இருக்கும் மீன் இறங்குதளம் பகுதி, வெறிச்சோடி கிடக்கிறது. கனமழையால் பழவேற்காடு மீனவப்பகுதியில் மீனவர்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்து உள்ளது.மீன்வளம், கடலோர காவல்படை மற்றும் வருவாய்த்துறையினர் பழவேற்காடில் முகாமிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.பூ பயிரிட்ட விவசாயிகள் மழையால் செடிகளில் இருந்து பூக்களை பறிக்க முடியாததால், பூக்கள் செடியிலேயே அழுகி விடுகின்றன. ஒரு சில விவசாயிகள், மழையிலும் நனைந்தவாறு பூக்களை பறித்துக் கொண்டு திருத்தணி பூ மார்க்கெட்டில் விற்பனை செய்தனர். நேற்று காலை, 11:00 மணியில் இருந்து ஊத்துக்கோட்டை, பென்னலுார்பேட்டை, பெரியபாளையம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் புகுந்தது. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.ஊத்துக்கோட்டை பஸ் நிலைய நுழைவு, கண்ணதாசன் நகர், காவல் நிலைய பின்புறம், வீரபத்ர கோவில் வளாகம், கலைஞர் நகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கியது. பஜார் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டதால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் தேங்கியது. இதனால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் மழையால் பாதிப்பு உள்ளதா என பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் ஆய்வு மேற்கொண்டார். மழைநீர் தேங்கும் இடங்களை ஆய்வு செய்தார். பொதுமக்களின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜன் தலைமையில், பி.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று அவசர கூட்டம் நடத்தப்பட்டது. வருவாய், உள்ளாட்சி, நீர்வளம், நெடுஞ்சாலை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.முன் எச்சரிக்கை நடவடிக்கை, நிவாரணம் மற்றும் மீட்பு பணிகள் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து எம்.எல்.ஏ., தலைமையிலான குழுவினர், வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களை ஆய்வு மேற்கொண்டு முன் ஏற்பாடுகளை கேட்டறிந்தார்.தலையாரிபாளையம், வல்லம்பேடுகுப்பம் ஆகிய கிராமங்களில் உள்ள பல்நோக்கு பேரிடர் மைய கட்டடங்கள் தயார் நிலையில் உள்ளன. சுண்ணாம்புகுளம் கிராமத்தில் 250 பேர், பெதிப்பாளையம் கிராமத்தில் 450 பேர், அரியதுறை கிராமத்தில் 90 பேரை தற்காலிகமாக தங்க வைத்து உணவு வழங்கப்பட்டு வந்தது. நேற்று மாலை முதல் அதிகம் பேர் தங்க துவங்கினர்.மேலும், வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் தற்காலிக மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.ஆரணி ஆறு மற்றும் அதன் கரையோர பகுதிகளை நீர்வளத்துறையினர் தீவரமாக கண்காணித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலையத்தில், பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக உள்ளனர். அதேபோன்று மாவட்ட எஸ்.பி.,யின் சிறப்பு பேரிடர் மீட்பு குழுவினர், எளாவூர் ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் மீட்பு தளவாடங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். சாலைகளில் தண்ணீர் தேங்காதபடி உள்ளாட்சி நிர்வாகங்கள் உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கும்மிடிப்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் காலை முதல் நேற்று அதிகாலை வரை, 10 செ.மீ., மழை பதிவாகியது. நேற்று காலை முதல் மிக கனமழை பெய்தது. - நமது நிருபர் குழு-


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !