அரசு மருத்துவமனையில் உதவி மையம் திறப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், சிகிச்சை பெறும் இடத்தை அறிந்து கொள்வதற்காக உதவி மையம் திறக்கப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, ஜே.என்.சாலையில் ஆறு மாடி கட்டடத்தில் இயங்கி வருகிறது. அங்கு, தினமும் 3,000க்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், அம்மருத்துவமனை வளாகத்தில் குழந்தைகள், சர்க்கரை நோய் பாதிப்பு, கண், பல், எலும்பு மூட்டு, இதயம், மகப்பேறு உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இ.சி.ஜி., எக்ஸ்ரே, ஸ்கேன் போன்ற வசதிகளும் உள்ளன. தினமும் 10க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நடந்து வருகிறது. மருத்துவமனையில் உள்ள பரிசோதனை, சிகிச்சை அரங்கு, பல்வேறு நோய் பிரச்னைக்கு வருவோர், எந்த இடத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என, அறியாமல் திணறி வருகின்றனர். மேலும், நோயாளிகளை காண வரும் உறவினர்களும், அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் பரிதவித்து வருகின்றனர். இதையடுத்து, மருத்துவமனையில், நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் தகவல் பெறும் வகையில், கணினி வசதியுடன் கூடிய தகவல் மையம் திறக்கப்பட்டு உள்ளது. இதை, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மருத்துவர்கள் ராஜ்குமார், பிரபுசங்கர், ஜெகதீஸ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.