உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / அதிகாரிகளின் அலட்சியத்தால் உயர்மட்ட பாலம்...பலவீனம்!:15 மீனவ கிராமங்கள் தீவாக மாறும் அவலம்

அதிகாரிகளின் அலட்சியத்தால் உயர்மட்ட பாலம்...பலவீனம்!:15 மீனவ கிராமங்கள் தீவாக மாறும் அவலம்

பழவேற்காடு:மீனவ மக்களின் நீண்டகால கோரிக்கையின் பயனாக பழவேற்காடு ஏரியின் குறுக்கே அமைந்த உயர்மட்ட பாலம் அதிகாரிகளின் அலட்சியத்தால் பலவீனம் அடைந்துள்ளது. இதை சீரமைக்காததால், 15 மீனவ கிராமங்கள் தீவாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடற்கரை பகுதியை ஒட்டி, லைட்அவுஸ், அரங்கம்குப்பம், வைரன்குப்பம் உள்ளிட்ட, 15மீனவ கிராமங்கள் உள்ளன.இங்கு, 30,000க்கும் அதிகமான மீனவ மக்கள் வசிக்கின்றனர். மேற்கண்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அத்யாவசிய தேவைகளுக்கு, பழவேற்காடு பஜார் பகுதிக்கு செல்ல வேண்டும்.கிராமங்களுக்கும், பஜார் பகுதிக்கும் இடையே, பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரி அமைந்து உள்ளது. ஏரியை கடக்க மீனவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஏரியின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி தொடர் போராட்டங்களை மேற்கொண்டனர்.அதையடுத்து, 15 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்களின், 30 ஆண்டு கால கோரிக்கையின் பயனாக, சுனாமி அவசரகால நிதியுதவி திட்டத்தில், 2010ல், 17.15 கோடி ரூபாயில் ஏரியின் குறுக்கே, உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டது. இது, 453 மீ., நீளம், 6மீ. அகலம், 12 துாண்களுடன் பழவேற்காடு - லைட்அவுஸ்குப்பம் இடையே அமைந்தது.அப்போதைய துணை முதல்வரும், தற்போதைய முதல்வருமான ஸ்டாலின் திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.இந்நிலையில், தொடர் பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு இல்லாமல் பாலம் அதன் உறுதிதன்மையை இழந்து வருகிறது. பழவேற்காடு பஜார் பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி அரை அடிக்கு கீழறங்கி உள்வாங்கி இருக்கிறது.வாகனங்கள் அப்பகுதியை கடக்கும்போது சிரமப்படுகின்றன. பாலம் உள்வாங்கி இருப்பதால், அதன் உறுதிதன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது.பாலத்தின் பக்கவாட்டு பகுதிகளில் செடிகள் வளர்ந்துள்ளன. ஏரியில் உள்ள துாண்களின் அடிப்பகுதியும் உப்பு காற்றில் சிமென்ட் பூச்சுகள் அரிக்கப்பட்டு உள்ளன. இணைப்பு சாலையின் இருபுறம் முள்செடிகள் வளர்ந்தும், மண் சரிவுகள் ஏற்பட்டு உள்ளன.பாலத்தின் இருபுறமும் கம்பங்கள் அமைத்து மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. அவற்றை ஊராட்சி நிர்வாகங்கள் பராமரிப்பதா? நெடுஞ்சாலைத்துறை பராரிப்பதா என்ற போட்டா போட்டியில் உரிய பராமரிப்பு இல்லாமல் பாலம் பலவீனம் அடைந்து வருகிறது. நீண்டகால கோரிக்கையின் பயனாக அமைந்த பாலம் பராமரிப்பு இல்லாமல் பலவீனமாகி வருவதை கண்டும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை எண்ணியும் மீனவ கிராமங்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.இது குறித்து தமிழ்நாடு மீனவர் சங்கம் மாநில தலைவர் துரைமகேந்திரன் கூறியதாவது:பாலம் திறந்ததில் இருந்து 14 ஆண்டுகளாக பராமரிப்பு பணிகள் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. சரிவுகள், பாலத்தின் கட்டுமானங்களில் வளர்ந்துள்ள செடிகள் அகற்றப்படவில்லை. பாலத்தின் இருபுறமும் மணல் குவிந்துள்ளது. இந்த பாலமானது, 15 மீனவ கிராமங்களை மட்டும் இணைக்கவில்லை. அவர்களது வாழ்வாதாரம், கல்வி, சுகதாரம் ஆகியவற்றிற்கு பெரிதும் உதவியாய் இருக்கிறது.பராமரிப்பு பணிகளில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். இதேநிலை தொடர்ந்தால், பாலம் அதன் உறுதிதன்மையை முழுதும் இழந்து, கடற்கரையோரத்தில் உள்ள, 15 மீனவ கிராமங்கள் தீவுப்பகுதியாக மாறும் அபாயம் உள்ளது. உடனடியாக அதிகாரிகள் பாலத்தை முழுமையாக ஆய்வு செய்து, பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ