உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரூ.58 கோடியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் பல்முனைய சரக்கு பூங்காவை இணைக்க நடவடிக்கை

ரூ.58 கோடியில் நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் பல்முனைய சரக்கு பூங்காவை இணைக்க நடவடிக்கை

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், மப்பேடு ஊராட்சியில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில், 181 ஏக்கர் பரப்பளவில், 1,200 கோடி ரூபாய் முதலீட்டில், பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமைக்க, கடந்த 2021ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.அப்போது, தமிழக அரசுடன் இணைந்து, பொது மற்றும் தனியார் பங்களிப்புடன், பல்முனைய சரக்குப் போக்குவரத்துப் பூங்காவை, மத்திய அரசு தமிழகத்தில் துவங்குவது, மகிழ்ச்சி அளிப்பதாக தமிழக முதல்வர் தெரிவித்தார்.இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் அமையும் முதலாவது பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்கா அமையும் பகுதி, மிக முக்கிய தொழில் பகுதியாக இருக்கிறது.இந்த பூங்கா, சென்னை எல்லை சுற்றுவட்டச் சாலைக்கு மிக அருகில் அமைந்துள்ளது.சென்னை விமான நிலையம், சென்னை துறைமுகம், காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளி துறைமுகம் மற்றும் புதிதாக அமையவுள்ள பரந்துார் விமான நிலையம் ஆகியவற்றை, சிறப்பான முறையில், இது இணைக்க வழிவகை செய்கிறது.இந்த பூங்காவை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மற்றும் சென்னை எல்லை சுற்றுச்சாலையுடன் இணைக்கும் வகையில், இப்பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.மேலும், இந்த பல்முனை சரக்கு பூங்காவிலிருந்து, 10 கி.மீ., துாரத்தில் உள்ள கடம்பத்துார் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில், ரயில்வே பாதை அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.முதல் கட்டமாக, மண்ணுார் முதல் சரக்கு பெட்டக பூங்கா வரை, 5.4 கி.மீ., துாரமுள்ள சாலை, 58 கோடியில் விரிவாக்கப் பணிகள் நடந்து வருகின்றன.இதில், தேசிய நெடுஞ்சாலையோர மழைநீர் கால்வாய்கள் அமைக்கும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.தற்போது, சாலை விரிவாக்கம், மீடியன் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதில், கொட்டையூர் கிராமத்திற்கு செல்ல, மாற்றுப்பாதை பணிகளும் நிறைவடைந்து, போக்குவரத்து நடந்து வருகிறது.மேலும், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகளுக்காக, ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றும் பணியும் நடந்து வருகிறது.இதேபோல், தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு இடையூறாக இருக்கும் மின் கம்பங்களை மாற்றியமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இன்னும் இரு ஆண்டுகளில், இந்த நெடுஞ்சாலையில் மேம்பாலமும், அருகில் உள்ள கடம்பத்துார் ரயில் நிலையத்திலிருந்து ரயில் பாதையும் அமைக்கப்பட்ட பின், பல்முனை சரக்கு பூங்கா பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி