உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மீஞ்சூரில் துணை மின்நிலைய திட்டம்... கிடப்பில்!

மீஞ்சூரில் துணை மின்நிலைய திட்டம்... கிடப்பில்!

மீஞ்சூர்,மீஞ்சூரில் துணை மின்நிலையம் அமைக்க, 2011ல் திட்டமிடப்பட்டு, கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அதிகரித்து வரும் குடியிருப்புகளால் குறைந்த மின் அழுத்தம் மற்றும் இரவு நேரங்களில் மின்வெட்டு தொடர்வதால், பயனீட்டாளர்கள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் உள்ள அரியன்வாயல், எடப்பாளையம், அன்பழகன் நகர், புதுப்பேடு, கேசவபுரம் உள்ளிட்ட பகுதிகளில், 20,000 குடியிருப்புகள், 1,600 கடைகள், 12 அரசு மற்றும் தனியார் பள்ளிகள், 10 தனியார் மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையம் என, 22,000க்கும் மேற்பட்ட மின் பயனீட்டாளர்கள் உள்ளனர்.

இடம் தேர்வு

இதற்கு 4 கி.மீ., தொலைவில் உள்ள மேலுார் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் நடைபெறுகிறது.மீஞ்சூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளுக்கு நாள் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அதிகரித்து வருவதால், மேலுார் துணை மின்நிலையத்தில் இருந்து வினியோகிக்கப்படும் மின்சாரம் போதுமானதாக இல்லை.இதனால் மேற்கண்ட பகுதிகளில் குறைந்த மின் அழுத்தம் ஏற்படுகிறது. இரவு நேரங்களில் அதிக மின் பயன்பாடு காரணமாக மின்மாற்றிகளில் பழுது ஏற்பட்டு, மின்வெட்டு தொடர்கிறது.சீரான மின்வினியோகத்திற்கு, மீஞ்சூர் பகுதியில் துணை மின்நிலையம் அமைத்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் தொடர்ந்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.அதையடுத்து, 2011ல், மீஞ்சூர் பகுதியில், 33 கிலோ வாட் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும் என, மின்வாரியம் தெரிவித்து, அதற்கான இடம் தேடும் பணி நடந்தது.ஆனால் காலப்போக்கில், அடுத்த கட்ட நடவடிக்கை ஏதும் இல்லாமல், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 13 ஆண்டுகளாக மீஞ்சூர் பகுதிவாசிகள், துணை மின்நிலையத்திற்கு காத்திருப்பதும் தொடர்கிறது.

குடிநீர் தட்டுப்பாடு

இதனால் நாள்தோறும் தொடரும் மின்வெட்டுகளால் பொதுமக்கள், வியாபாரிகள் அவதிப்படுவதும் நீடிக்கிறது. மின்வெட்டு பிரச்னையால், மோட்டார் களை சரிவர இயக்க முடியாமல் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. பகல் நேர மின்வெட்டால் வியாபாரிகள் வணிக ரீதியான வருவாய் இழப்பிற்கு ஆளாகின்றனர்.கோடைகாலங்களில் மின்வெட்டு, குறைந்த மின் அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகளால் இன்னலுக்கு ஆளாகும் மக்கள் போராட்டங்களில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது.சென்னை புறநகர் பகுதிகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் பகுதியாக மீஞ்சூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளன. இங்கு நாளுக்குள் நாள் குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள், அதிகரித்து வருகின்றன. இங்கு துணை மின்நிலையம் அமைப்பது அவசியம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.மீஞ்சூரில் துணை மின்நிலையம் அமைக்க வலியுறுத்தி வருகிறோம். மீஞ்சூர் நகரத்தை ஒட்டியுள்ள நாலுார் பகுதியில், இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், வருவாய்த்துறையின் அனுமதிக்கு காத்திருப்பதாகவும் மின்வாரியம் பல வருடங்களாக தெரிவித்து வருகிறது. ஆனால் எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. உடனடியாக துணை மின்நிலையம் அமைக்கவும், அதே வளாகத்தில் அலுவலக கட்டடம், கட்டணம் செலுத்துமிடம் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.- அபுபக்கர், சமூக ஆர்வலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை