வரும் 30க்குள் சொத்து வரி செலுத்தினால் ஊக்கத்தொகை வழங்கப்படும்: கமிஷனர்
திருத்தணி:திருத்தணி நகராட்சியில் 21 வார்டுகளில், 13,548 குடியிருப்புகள், 246 அரசு கட்டடங்கள், 2,571 காலிமனைகள், 1,200 வணிக வளாகங்கள் மற்றும் 95 தனியார் அமைப்புகள் உள்ளன. இந்த கட்டடங்கள் மற்றும் காலிமனைக்கு, ஆண்டுதோறும் இரு முறை சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, குத்தகை மற்றும் வாடகை வாயிலாக ஆண்டுக்கு, 6.30 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது.இந்நிலையில், நகராட்சி நிர்வாகம், 2025 - -26ம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை, இம்மாதத்திற்குள் செலுத்தும் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.இதுகுறித்து திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:நகராட்சி எல்லைக்குள் சொத்து வரி செலுத்தும் உரிமையாளர்கள், நடப்பாண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை வரும் 30ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.இம்மாதத்திற்குள் சொத்துவரி செலுத்தும் உரிமையாளர்களுக்கு மட்டும், ஐந்து சதவீதம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். அவ்வாறு செலுத்தாமல், மே 1ம் தேதிக்கு மேல் சொத்து வரி செலுத்தினால், ஊக்கத்தொகை இழப்பத்துடன் ஒரு சதவீதம் வட்டி தொகை சேர்த்து, வரி செலுத்த நேரிடும்.எனவே, உரிமையாளர்கள் சொத்து வரியை, இல்லம் தேடி வரும் வரி வசூலிப்பாளர்களிடம் ரொக்கமாகவும், காசோலை, வரைவோலை மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை வாயிலாக செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.மேலும், சொத்து வரியை https://tnurbanepay.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக 'கிரெடிட், டெபிட் கார்டுகள்' உள்ளிட்டவற்றில் சொத்து வரி செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.எனவே, அனைத்து உரிமையாளர்கள் வரும் 30க்குள் சொத்து வரி செலுத்தி, நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்கு, தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும். இம்மாதம் முழுதும் நகராட்சி அலுவலகத்தில் இயங்கி வரும் வசூல் மையம், வாரத்தில் ஏழு நாட்களும் இயங்கும்.இவ்வாறு அவர் கூறினார்.