நெல் பயிரிட்ட நிலப்பரப்பு தவறான தகவல்கள் பதிவு
திருத்தணி:தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் மாநில துணை தலைவர் வேணுகோபால், நேற்று திருத்தணி ஆர்.டி.ஓ.,விடம் அளித்த மனு விபரம்: திருத்தணி வருவாய் கோட்டத்தில் இயங்கி வரும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு, விவசாயிகள் நெல் பயிரிடப்பட்ட நிலப்பரப்பு விபரங்களை, வேளாண் மற்றும் வருவாய் துறையினர் தவறாக குறிப்பிட்டுள்ளனர். நிலப்பரப்பு மிகவும் குறைவாகவும், தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாலும், நெல் பயிரிட்ட விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். நொச்சிலி கிழக்கு வருவாய் கிராமத்தில், 23 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிட்டுள்ளதாகவும், மேற்கு வருவாய் கிராமத்தில், 13 ஏக்கர் பரப்பில் நெல் பயிரிட்டுள்ளதாகவும் வேளாண், வருவாய் துறையினர், நெல் கொள்முதல் நிலையங்களில் தகவல் அளித்துள்ளனர். ஆனால், நொச்சிலி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டத்தில், 80 விவசாயிகள், 234 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் பயிரிட்டுள்ளனர். வேளாண், வருவாய் துறையினர் தவறான தகவல் கொடுத்துள்ளதால், அதற்கு ஏற்றவாறு தான், நேரடி கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, மீண்டும் வருவாய் துறையினர், நெல் பயிரிட்ட விவசாயிகள் மற்றும் நிலப்பரப்பு குறித்து கணக்கெடுத்து, கொள்முதல் நிலையங்களில் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற ஆர்.டி.ஓ., கனிமொழி, 'உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார்.