விவசாய கடனுக்கான வட்டி மானியம் 6 மாதங்களில்... ரூ.20 கோடி நிலுவை:கூட்டுறவு வங்கிகளுக்கு தராமல் நபார்டு இழுத்தடிப்பு
திருவாலங்காடு:தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடனுக்கான வட்டி மானியம், ஆறு மாதங்களில் 20 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இதை நபார்டு வங்கி விரைந்து விடுவிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி உட்பட ஒன்பது தாலுகாக்களில், 123 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.இதில், 5,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக, சிறு விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன், உரக்கடன், கறவை மாடு கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் வழங்கப்படுகின்றன.நெல், சிறுதானிய விவசாயம் உள்ளிட்ட பிற தேவைகளுக்கு நகைக்கடன் பெற, அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை விவசாயிகள் நாடி செல்கின்றனர். ஒருவர் அதிகபட்சம், 10 லட்சம் ரூபாய் வரை நகைக்கடன் பெறலாம். மேலும், அந்தந்த வங்கிகளின் பண பரிவர்த்தனையை பொறுத்து கடன் வழங்கப்படுகிறது.தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு, நகைக்கடன் பண பரிவர்த்தனை முழுதும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது. வங்கியின் செயல்பாட்டை பொறுத்து, நகைக்கடனுக்கான பணம் வழங்கப்படுகிறது.தமிழகத்தில், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக விவசாயிகளுக்கு பல்வேறு வகை கடன்கள் வட்டியின்றி வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு சங்கங்கள் சார்பில் வழங்கப்படும் வட்டியில்லாத கடன்களுக்கு, மாநில அரசுக்கு உதவிக்கரம் நீட்டும் வகையில், மத்திய அரசின் நபார்டு வங்கி மூலம் வட்டி மானியம் வழங்கப்படும்.நபார்டு வங்கியானது, வட்டி மானியத்தை சென்னை தமிழ்நாடு தலைமை கூட்டுறவு வங்கிக்கு வழங்கும். அவர்களிடம் இருந்து அந்தந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும். அங்கிருந்து, தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி வழங்கப்படும்.இந்நிலையில், ஆறு மாதங்களாக சங்கங்கள் வாயிலாக வழங்கப்பட்ட கடன்களுக்கான வட்டி மானிய நிதிக்கான பணத்தை நபார்டு வங்கி தரவில்லை. வழக்கமாக, இரண்டு முதல் மூன்று மாதத்தில் வட்டி மானியம் கொடுப்பர். தற்போது, ஆறு மாத நிலுவை என்பது சங்கங்களை நெருக்கடிக்கு ஆளாக்கி வருகிறது.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அதிகாரி கூறுகையில், 'சில வாரங்களில் நிதி ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது' என்றார்.
வலுவிழக்கும் சங்க செயல்பாடு
தலைவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் இருந்த காலத்தில் உரிய அழுத்தம் அளித்து நிதியை பெற்று தந்தோம்.பதவிக்காலம் காலாவதியாகி விட்ட நிலையில், சிறப்பு அலுவலர்களாக துணை பதிவாளர்கள் செயல்படுகின்றனர். முன்பு போல் அழுத்தம் கொடுக்காமல் உள்ளதால், நாளுக்கு நாள் சங்க செயல்பாடுகள் வலுவிழந்து வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், 20 கோடி ரூபாய் வட்டி மானியம் வர வேண்டியுள்ளது. அதேபோல், 37 மாவட்டங்களிலும் வட்டி மானியம் நிலுவையில் உள்ளது. எனவே, உடனடியாக சிறப்பு அலுவலர்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் பொது மேலாளர்களுக்கு கோரிக்கை கடிதம் அனுப்ப வேண்டும். அங்கிருந்து, மாநில அரசுக்கு கோரிக்கை அனுப்ப வேண்டும்.தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க தலைவர்,திருவள்ளூர்.