உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடகள சாம்பியன்ஷிப் போட்டி வீராங்கனையருக்கு அழைப்பு

தடகள சாம்பியன்ஷிப் போட்டி வீராங்கனையருக்கு அழைப்பு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கேற்க, வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள சங்கம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து, 14, 16 வயதுக்குட்பட்ட வீராங்கனையரின் திறமையை கண்டறிந்து, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்தும் வகையில், 'அஸ்மிதா லீக்' எனப்படும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நாடு முழுதும் நடந்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட தடகள சாம்பியன்ஷிப் போட்டி, திருவள்ளூர் எஸ்.டி.ஏ.டி. தடகள திடலில், வரும் 28ம் தேதி நடக்க உள்ளது. இதில், மாவட்டத்தில் உள்ள 14, 16 வயதுக்குட்பட்ட வீராங்கனையர் பங்கேற்கலாம். இதுகுறித்து, திருவள்ளூர் தடகள சங்க செயலர் மோகன் கூறியதாவது: தடகள வீராங்கனையரின் திறமையை, 'அஸ்மிதா லீக்' எனப்படும் திட்டத்தின் வாயிலாக கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், இந்திய தடகள சங்கம் வழங்க முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இளம் வீராங்கனையர், ஒலிம்பிக் கனவுகளுடன் செல்ல பாதை தெரியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், இத்திட்டம் அவர்களின் கனவுக்கு பாதை அமைத்து கொடுக்கும். திருவள்ளூர் மாவட்டத்தில், வரும் 28ம் தேதி இப்போட்டி துவங்கவுள்ளது. இதில் 14, 16 வயதுக்கு உட்பட்ட தடகள வீராங்கனையர் பங்கேற்று, தங்கள் திறமையை உலகிற்கு காட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !