தீர்மானம் நிறைவேற்றினால் போதுமா? தெரு நாய்களை கட்டுப்படுத்தாமல் அலட்சியம்
திருவள்ளூர்,:திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் சுற்றித்திரியும் தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கு.க., அறுவை சிகிச்சை செய்ய தீர்மானம் நிறைவேற்றப் பட்டும் நாய்களை கட்டுப்படுத்தாமல் நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது.திருவள்ளூர் நகராட்சியில், 27 வார்டுகளில், 450க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. கடந்த, ஆண்டு நடத்திய கணக்கெடுப்பில், 6,000க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டன. தெருவில் நடந்து செல்வோர், இருசக்கர வாகனத்தில் பயணிப்போரை தெரு நாய்கள் விரட்டிச் சென்று கடிக்கின்றன.இதனால், பள்ளி மாணவ- மாணவியர், வயதானோர் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என, நகரவாசிகள் கோரிக்கை விடுத்தும், நகராட்சி நிர்வாகம் அலட்சியமாக உள்ளது. பெயருக்கு, சில தெரு நாய்களை பிடித்து விட்டு தொடர்ந்து அமைதி காத்து வருகிறது.தெருவில் சுற்றித்திரியும் நாய்களை, தனியார் நிறுவனம் மூலமாக பிடித்து குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, நாய் ஒன்றுக்கு, 1,650 ரூபாய் வழங்கவும் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. கடந்த, சில நாட்களுக்கு முன் நடந்த நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தெரு நாய்களை கட்டுப்படுத்த, இதுவரை நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர்.எனவே தெருவில் சுற்றித்திரியும் நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகர மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.