சுரங்கப்பாதையில் 10 ஆண்டாக தேங்கும் மழைநீர் இதுக்கு ஒரு முடிவே கிடையாதா?
திருவாலங்காடு: மணவூர் ரயில்வே சுரங்கப்பாதையில், 10 ஆண்டுகளாக மழைநீர் தேங்குவதை சரி செய்ய நெடுஞ்சாலை துறையோ ரயில்வே துறையோ நடவடிக்கை எடுக்காததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். சென்னை --- அரக்கோணம் ரயில் மார்க்கத்தில் திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது மணவூர் ரயில் நிலையம். இந்த மார்க்கத்தில் தினமும் 400க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. ரயில் போக்குவரத்து நிறைந்த தடம் என்பதால் 100 ஆண்டுகளுக்கு முன்பே மணவூர் ரயில் நிலையத்தில் இருந்து மருதவல்லிபுரம் --- மணவூர் கிராமங்களை இணைக்கும் வகையில் ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருவாலங்காடு, பேரம்பாக்கம், தக்கோலம், கடம்பத்துார், திருவள்ளூர் பகுதிகளுக்கு செல்கின்றன. கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியது. மழை நின்று மூன்று நாட்களை கடந்தும், மழைநீர் வடியாமல் உள்ளது. இதனால், பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்துடன் கடந்து வருகின்றனர். பலர், வாகனம் பழுதாகுமோ என்ற அச்சத்தில், 4 கி.மீ., சுற்றி சின்னம்மாபேட்டை வழியாக செல்கின்றனர். அவசரத்திற்கு கூட சுரங்கப்பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை 10 ஆண்டுகளாக தொடர்வதாக மணவூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மணவூர் மக்கள் கூறியதாவது: அண்ணாநகர், மணவூர் பகுதிகளில் சேகரமாகும் மழைநீர் தற்போது சுரங்கப்பாதையில் விடப்படுகிறது. இதுகுறித்து நெடுஞ்சாலை துறையோ, ரயில்வே துறையோ கண்டுக்கொள்ளவில்லை. இதனால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் துரித நடவடிக்கை எடுத்து, உடனடியாக சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரை வெளி யேற்றி சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.