ஜெ.ஜெ.அவென்யூ சாலை சேதம் குடியிருப்பு வாசிகள் கடும் அவதி
திருவள்ளூர் திருவள்ளூர் அடுத்த ஜெ.ஜெ.அவென்யூவில் தார்ச்சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில், ஐ.சி.எம்.ஆர்., வேடங்கிநல்லுார் பகுதியில் ஜெ.ஜெ.அவென்யூ உள்ளது. பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவானுார்கண்டிகை ஊராட்சிக்கு உட்பட்ட 250க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில், 1,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.திருவள்ளூர் நகரை ஒட்டி அமைந்திருப்பதாலும், புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ளதாலும், இந்த நகரில் புதிதாக குடியிருப்புகள் உருவாகி வருகின்றன.புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே, இக்குடியிருப்புக்கு செல்ல தார்ச்சாலை அமைக்கப்பட்டது. தற்போது, இச்சாலை ஜல்லிக் கற்கள் பெயர்ந்து, கரடு முரடாக காட்சியளிக்கிறது. இதனால், இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துடன் பயணிக்க வேண்டியுள்ளது.மேலும், பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாமல் பரிதவித்து வருகின்றனர். எனவே, பூண்டி ஒன்றிய நிர்வாகம், ஜெ.ஜெ.அவென்யூ பகுதிக்கு செல்லும் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.