திருவள்ளூரில் ஹிந்து அறநிலைய துறை இணை ஆணையர் அலுவலகம் துவக்கம்
திருவள்ளூர்:திருவள்ளூரில், புதிதாக ஹிந்து அறநிலையத் துறை இணை ஆணையர் அலுவலகம் துவக்கப்பட்டு உள்ளது. ஹிந்து அறநிலையத் துறை, வேலுார் மண்டல இணை ஆணையர் நிர்வாகத்தின் கீழ், வேலுார், ராணிப்பேட்டை, திருப்பத்துார் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் இயங்கி வந்தன. 1,026 கோவில்கள் இதில், திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும், ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில், பட்டியலுக்கு உட்பட்ட 202, பட்டியைலைச் சாராத 824 என, மொத்தம் 1,026 கோவில்கள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, மீஞ்சூர், ஊத்துக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கோவில் நிர்வாகம் தொடர்பாக, அவற்றின் செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் பொதுமக்கள், குறைதீர்வு மனு அளிக்க, 200 கி.மீ., பயணித்து, வேலுார் சென்று வந்தனர். மேலும், மாவட்டத்தில் பெரும்பாலான கோவில்கள், சென்னை மாநகருக்கு அருகில் அமைந்துள்ளதால், அவற்றுக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்களை மேலாண்மை செய்யவும், நீதிமன்ற நிலுவை வழக்கை கண்காணித்து, கோவில்களுக்கு சாதகமான தீர்ப்பு பெறவும் நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. அறிவிப்பு கோவில் சொத்துக்களை கண்காணித்து, முறையாக வருவாய் ஈட்டும் வகையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு, தனியாக இணை ஆணையர் அலுவலகம் அமைக்கப்படும் என, தமிழக ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி, திருவள்ளூர், ஜே.என்.சாலை அருகில், திருவள்ளூரில் ஹிந்து அறநிலையத்துறையின் புதிய மண்டல அலுவலகம், தனியார் கட்டடத்தில் நேற்று முதல் துவக்கப்பட்டு உள்ளது. இதை, கலெக்டர் பிரதாப் தலைமையில், தமிழக சிறுபான்மையின துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், திருவள்ளூர் மண்டல இணை ஆணையர் அனிதா, உதவி ஆணையர் சிவஞானம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.