பூட்டி கிடக்கும் காக்களூர் புறக்காவல் நிலையம்
திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் பூங்காநகர், மாருதி நகர் நியூ டவுன், ஆஞ்சநேயர்புரம், வி.எம்.நகர், அவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இங்கு 3,000 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக சங்கிலி பறிப்புச் சம்பவங்கள், வீடுகளின் பூட்டை உடைத்து திருட்டுச் சம்பவங்கள் ஆகியவை நிகழ்வது தொடர்கதையாக உள்ளன.இதையொட்டி ஊராட்சி மக்கள் முடிவெடுத்து, புட்லுார் ரயில் நிலையம் செல்லும் சாலையில், காக்களூர் வீர ஆஞ்சநேயர் கோவில் எதிரே கடந்த 2010- -11ம் ஆண்டில் 1.55 லட்சம் ரூபாய் மதிப்பில் புறக்காவல் நிலையம் கட்டி கொடுத்தனர். மேலும் அந்த புறக்காவல் நிலையத்தில் 24 மணி நேரமும் போலீசார் சுழற்சி முறையில் இருந்து கண்காணிக்கவும், ரோந்து செல்லும் போலீசார் அங்கு சென்று கையெழுத்துயிட வேண்டும் எனவும் கிராம மக்கள் வலியுறுத்தினர்.ஆனால் இதுவரை நிரந்தரமாக போலீசார் நியமிக்கப்படாமல் அந்த புறக்காவல் நிலையம் பூட்டிக் கிடக்கிறது. இதனால், இப்பகுதிவாசிகள் திருட்டு அச்சத்தில் ஆழ்ந்து உள்ளனர். எனவே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து காக்களூர் புறக்காவல் நிலையத்தில் சுழற்சி முறையில் போலீசாரை பணியில் இருந்து கண்காணிக்க உத்தரவிட வேண்டும் என ஊராட்சி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.